பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

281

அவர்களைக் காவல்துறையினர் தளைப்படுத்தவும் கொடுமை செய்யவும் முற்பட்டு விடுகின்றனர். இவ்வகையில் ஆட்சியாளர் கொடுமையும் பணமுதலைகள் கொள்ளையடிப்பும் அளவுக்கு மீறி விட்டன. அரசு அதிகாரிகள் எல்லாரும் தங்களின் இயல்பான சட்டமுறை நடவடிக்கைகளைக் கைவிட்டுவிட்டு, ஆளுங்கட்சியில் உள்ள ஓர் எளிய தொண்டனுக்கும் தொண்டர்களாய் இயங்கத் தொடங்கிவிட்டனர். நடுநிலையாக நடக்க வேண்டிய அறமன்றங்களும் நடுவர்களும் கூட அரசுக்கும் ஆளும் கட்சியினர்க்கும் அஞ்சிக்கொண்டு, குடியாட்சி அமைப்பு முறைகளையும் ஞாயத் துறை நேர்மைகளையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டன.

இந் நிலைகளையெல்லாம் எதிர்க்கட்சிக்காரர்கள் கூட தட்டிக் கேட்க முடியாதபடி நிலை மிகக் கீழாகப் போய்விட்டது. அரசியல் நிலையில் தங்களுக்கு ஒத்துவராத, இணங்கிப் போகாத மாநில அரசுகளை, நடுவணரசு கொஞ்சமும் தயக்கமின்றிக் கவிழ்க்கத் தொடங்கி விட்டது.

நாட்டின் பொருளியல் நிலையோ, அரசியல் நிலையை விட மிகவும் கேடாகப் போய்விட்டது. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பொதுமக்களைக் கொள்ளையடிக்கலாம்; அவர்களிடமிருந்து கையூட்டு, பணிக்கொடை, தொண்டுக் கட்டணம் (சேவைக் கட்டணம்), அன்பளிப்பு என்னும் பெயர்களால், பள்ளிகள், கல்லூரிகள், நகராட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆட்சித் துறை அலுவலகங்கள், காவல்துறை, போக்குவரத்துத் துறை இன்னோரன்ன அனைத்து நிலைகளிலும் பணங்களை அளவுக்கு மீறிச் சுரண்டலாம், கொள்ளையடிக்கலாம், கொழுக்கலாம் என்றாகிவிட்டது. இவற்றை எவரும் கேட்க முடியாதவாறு ஒருவர்க் கொருவர், ஒருதுறைக்கு ஒருதுறை மிகக் கவனமாகவும் இணக்கமாகவும் நடந்துகொள்வது, அலுவலக நடைமுறைகளிலேயே ஒன்றாகிவிட்டது.

மக்களின் இன்றியமையாத தேவைக்கான உண்ணு பொருள்கள், உடுத்தற் பொருள்கள், உறையுள்கள் ஆகியவை அளவுக்கு மீறி, ஏழை மக்களின் கைகளுக்கு எட்டாதவாறும், கிட்டாதவாறும் விலையேற்ற மலைகளில் ஏறி அமர்ந்துவிட்டன. அன்றாடம் தங்கள் உடல்களை வருத்தி வாழ்கின்ற வறுமை மக்களும், ஏழை உழவர்களும், இக் கடுமையான விலையேற்றங்களால் நசுக்குண்டு நலிந்து அங்கங்கு அழியத் தொடங்கி விட்டனர்.