பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

294

வேண்டும் விடுதலை

சாதிக்குழப்பங்களை வலிவூன்றச் செய்திருந்த, அவர்களை ஒன்றுபடாமல் செய்திருந்ததோ, அவ்வாறே மொழிநிலையிலும் ஆரிய மொழியாகிய சமசுக்கிருதக் கலப்பால், தமிழ் மொழியின் தூய்மையையும், உண்மை வடிவினையும் சிதைத்து, வலுக்குன்றச் செய்து தனித்தியங்க இயலாமல் அதனைத் தாழ்த்தி வைத்திருந்தது. இதனால் தமிழர், உண்மையான தாய்மொழி உணர்வு கொள்ள முடியாத வர்களாகவும் இன உணர்வால் எழுச்சியுற்று ஒன்றுபட முடியாதவர்களாகவும் இருந்தனர். அத்துடன் அவர்கள் தங்கள் தாய் மொழியின் பெயரால் தமிழினத்தவர்கள் அல்லது தமிழர் என்று கூறிக்கொள்ளவும் கூட இயலாதவர்களாக இருந்தனர். மேலும், தமிழர், ஆரியத்தை எதிர்த்துத் தனித்துப் போராட முடியாதவாறு, மதத்தாலும், சாதியாலும் சிதறிச் சிறுபான்மையினராகவும் இருந்தனர்.

எனவேதான், பெரியார் அவர்கள் குமுகாய, அரசியல் பொருளியல் நிலைகளில் மிகவும் வல்லாண்மை யுற்றிருந்த ஆரியத்தை எதிர்த்துப் போராடுவதற்காகத் தமிழர், தெலுங்கர், கன்னடியர், மலையாளிகள் ஆகிய தென்திராவிட மொழியின மக்களை ஒன்று கூட்டக்கருதினார். இவ்விக்கட்டான தவிர்க்க முடியாத நிலையில் தான் திராவிடத்தின் பெயரால் இயக்கம் காண வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது போலும், மேலும் பெரியார் அவர்களே பிறப்பால் கன்னடியர். ஆகையால் தமிழுக்கென்று மட்டும் தனித்து ஓர் இயக்கத்தைக் கூட்டவும் தமிழர்கள் அவர்மேல் நம்பிக்கை வைக்கவுமான ஒரு சூழல் அன்று உருவாகியிருக்கவில்லை என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். காலப்போக்கில் மொழிவழி மாறியவர்கள் பிரிக்கப் பெற்றுத் திராவிட இனங்கள் இனி ஒன்றாக முடியாத நிலை ஏற்பட்ட பின்னர் பெரியார் திராவிட நாட்டுணர்வைத் தவிர்த்துத் தனித்தமிழ் நாட்டுணர்வு கொண்டாரேனும் அவரால் முன்னர் தொடங்கப் பெற்ற திராவிட இயக்கத்தைக் கைவிடவோ, அதைத் தமிழின உணர்வாக வேறுபடுத்திக் காட்டவோ இயலாமற் போனது. எனவே திராவிட இனமயக்கத்தையும் இரண்டாவதாக நாம் பிரித்துக்காட்டித் தவிர்க்க வேண்டுவதாயிருந்தது. இவ்விடத்தில் நாம் ஓர் உண்மையைத் தெளிவாக அறிந்து கொள்ளல் மிகவும் இன்றியமையாதது. திராவிடம் என்னும் சொல் ஆரியர் உருவாக்கிய சொல். அது முந்தித் தமிழர் வரலாற்றிலோ, பழந்தமிழ் இலக்கியங்களிலோ எங்கும் இல்லை. இக்கால் தூய தமிழர் மதங்களாகிய சிவனியமும் (சைவம்) மாலியமும் (வைணவம்