பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

297

தெய்வக் கொள்கைகள் அனைத்தும் தமிழரின் பழைய இறையியல் கோட்பாடே ஆகும். தமிழரின் மொழி எப்படிப் பழைமையோ, அவ்வாறே அவரின் இறைமையும் பழைமையே! தமிழ்மொழிதான் உலக மொழிகள் அனைத்துக்கும் எவ்வாறு மூலமும் முதலும் ஆனதோ, அவ்வாறே அதன் இறைமை உண்மையும் அனைத்து இனங்கட்கும் மூலமும் முதலுமாக இருக்கிறது.

ஆனால், தமிழர்களிடம் ஏற்கனவே வலிவாக வேரூன்றிப் போன இறைமை உண்மையை ஆரியம் மதமாகக் கீழிறக்கம் செய்து இந்து மதமாக்கி இழிவு படுத்தியது. எனவே, இந்து மதத்தைத் தாக்குவதற்கு இறைமையையும் தாக்க வேண்டிய தேவை பெரியாருக்கு ஏற்பட்டிருக்கலாம். என்று நாம் கருத வேண்டி உள்ளது. ஆனால் இதைப்பற்றியெல்லாம் நாம் அதிகமாகக் கவலைப்பட்டுக் கொள்ளத் தேவை அன்றும் இல்லை; இன்றும் இல்லை. ஆனால் தமிழின முன்னேற்ற முயற்சியாளர்களுக்கு இவை பற்றிய தெளிவுகள் தேவை! இல்லெனில் அம் முயற்சிகள் இறுதி வரை உறுதியாகவும் சரியாகவும் இருக்க இயலாது.

இனி, இத்துணையளவில், ஆரியக் கேடுகளை அழித்தொழிக்க வேண்டியிருந்த வலிமை தேவையாக இருந்ததால் தான் பெரியாரைத் தவிர வேறு எவரும் ஒரு போருணர்வு கொண்டு அதனொடு முடுக்கமாகப் பொருத முன்வராது பின் வாங்கிப் போயினர். இந்த நிலையில் பெரியாரேனும் இதைச் செய்தாரே என்று எண்ணித்தான். சிறிது மாறுபாடான அவரின் கருத்து நிலைகளையும் நேரடியாக நாம் எடுத்துக் கூறி முரண்பட்டுக் கொள்ளாமல், நமக்குகந்த முறையில் - தமிழருக்குத் தேவையான தனித்தமிழ்நாட்டுக் கொள்கையை நாம் அனைத்துக்கும் மேலாக உயர்த்திப் பிடித்துக் கொண்டு உரக்க முழக்கிவந்தோம்; வருகிறோம்; வருவோம்!

இத்தனித்தமிழ் நாட்டுக் கொள்கையும் கூட தமிழின உணர்வுள்ளவர்களிடம் தான் தோன்றி வலுப்பெற முடியும் இனி, தமிழின உணர்வு தோன்ற வேண்டுமாயின் தமிழ் மொழியுணர்வு மிக மிகத் தேவை. தாய்மொழியுணர்வின்றி இனவுணர்வு தோன்றவே தோன்றாது; அவ்வாறு ஒரு வேளை தோன்றினாலும் அது நிலைபெறாது உறுதியாயிராது; என்றோ ஒரு நாளில் அது நீர்த்துப் போய்விடும். இனி இனவுணர்வு வலுப்பெறாமல் நாட்டுணர்வு வலுப்பெறவே பெறாது. நாட்டுணர்வு வலுப் பெறாமல் தனிநாட்டுப் போராட்டம், விடுதலை முயற்சிகள் எப்படி வெற்றிபெற முடியும்?