பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

வேண்டும் விடுதலை

ஒருசிலர் பதவியினின்றிறங்கி, வேறு சிலர் அரசியல் அதிகாரம் பெற்றுவிடுவது மட்டும் போதாது. தமிழக அரசியல் அதிகாரத்தை எந்த ஓர் எதிர்க் கட்சி கைப்பற்றினாலும் நிலைமை இதுவாகத்தான் இருக்க முடியும். வேண்டும் பொழுது அரசியல் அதிகாரத்தையோ, சட்ட அமைப்புகளையோ உடனுக்குடன் மாற்றிக்கொள்ள முடியுமாறு, பாராளுமன்றப் பெரும்பான்மை பெற வடநாட்டினரின் ஆட்சியமைப்பை, தனிப்பட இயங்க வல்லமையற்றதும், சட்ட வரம்புக்குட்பட்டதும், எந்த நோக்கத்திலும் விலக்கலுக்கு உட்படுவதுமான இம்மாநில ஆட்சியின் முனை முறிந்த அதிகாரம் இங்குள்ளவர்களின் நன்மைக்கும். தன்மானக்காப்பிற்கும் என்றும் பக்கத் துணையாக இருந்துவிட முடியாது என்பது அரசியல் நுணுக்கமறிந்தவர்களுக்குத் தெளிவான உண்மையாகும்.

மாநில அரசாட்சி மாற்றம் மட்டும் மாநில உரிமைக்காப்பிற்கு துணையாக அமைந்துவிட முடியாது என்ற நிலை சட்ட அடிப்படையில் ஆணியறைந்து வைக்கப்பட்டிருக்கும் பொழுது, நாம் ஏன் இன்னும் அரசியல் நாடக அரங்கில் நடக்கும் வெறும் உப்புச்சப் பற்ற நடிப்புகளிலேயே மயங்கிக் கிடக்க வேண்டும்? எல்லாற்றானும் வட நாட்டுப்பிடிப்புகளிலிருந்து தமிழகம் தன்னை விடுவித்துக் கொள்ளமுயலுவதே அறிவுடைமையும், சரியானதும், காலத்தால் செய்யப்பட வேண்டிய செயலும் ஆகும் என்பதை இங்குள்ள தமிழர் ஒவ்வொவரும் உணர வேண்டும். நம் நிலைகளை நாமே வரையறுத்துக் கொள்ளும் உரிமையை நாம் பெற்றாலன்றி நாம் நினைக்கின்ற எந்தத் திருத்தத்தையும் அரசியலிலோ, பொருளியலிலோ குமுகவியலிலோ செய்து விட முடியாது. சிறு வினைகட்கும் மக்கள் ஆற்றலைத் திரட்டுவதும், அதனைக் கொண்டு வடவரை மிரட்டுவதும். அவர்கள் காவலர்களையும் பட்டாளப் படைகளையும் வைத்துக்கொண்டு வெருட்டுவதும், அதற்காகப் பலகோடி உருபாக்களைச் செலவிடுவதும் இந்நாட்டிற்கும் மக்களுக்கும் துளியும் நன்மை பயவா. இருக்க இருக்க மனச் சோர்வும் வாழ்வு அயர்ச்சியும் இவற்றால் ஏற்படுமேயன்றி, வெளி நாட்டினர் ஒரு சிலரைப் போல் ஒப்பற்ற உரிமை வாழ்வையும். அச்சமற்ற அரசியல் நடைமுறைகளையும் அமைத்துக்கொள்ளவே முடியாது. கால் கைகளின் கட்டுகளை அவிழ்த்துப் போட்டுவிட்டுத் தலைக் குடுமியை மட்டும் பிறருடைய கைகளில் நாம் தந்து கொள்ளுவது எவ்வாற்றானும் விடுதலை ஆகிவிடாது. எந்த நலத்தைக் கருதி நாம் அவ்வாறு நம்முடைய குடுமிகளைத்