பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302

வேண்டும் விடுதலை

போன்றது. அதில் களிம்பு போன்ற நச்சுணர்வுகள் ஊறிக் கொண்டே இருக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. புண்ணின் உள்ளே ஊறிக் கொண்டிருக்கும் சீழ் அப்படியே இருக்கும் பொழுது வெறுமனே மேல் மருந்து பூசி உடலை நலப்படுத்துவது யாங்கன் இயலும்?

எனவே, மக்களுக்கு ஓரளவேனும் பொதுமை உணர்வையும் பொதுவுடைமைச் சமநிலை வேட்கையையும் ஊட்டி, உணர்த்தி, விளக்கப் படுத்தாமல், அரசியல் உரிமையை மீட்டுக் கொடுக்க முயற்சி செய்வது, என்றோ எங்கோ எப்பொழுதோ செய்யத் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் விருந்துக்கென இப்பொழுதே இங்கேயே இலை விரித்து வைக்கும் பொருத்தமற்ற செயலாகவே போய்விடும் என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

எனவே, தமிழ் நாட்டு விடுதலைக்கெனத் தங்களை ஈகப்படுத்திக் கொள்ள விரும்பும் இளைஞர்கள், முதலில் தாங்கள் மீட்டெக்க விரும்பும் விடுதலை எந்த இன மக்களுக்காக என்பதையும், அவர்களின் இப்பொழுதைய அரசியல், இனவியல், பொருளியல் விழிப்புணர்ச்சி எத்தகையது, எந்த அளவினது என்பதையும் அடியூன்ற எண்ணிப் பார்த்து, அதற்குத்தக தம் விடுதலை முயற்சிகளைப் பல்வேறு கட்டங்களாகப் பகுத்து அளவிட்டுக் கொண்டு, முதல் கட்டம், இரண்டாவது கட்டம், மூன்றாவது நான்காவது கட்டங்கள் என்று வரையறை செய்து கொண்டு, அவற்றுக்குத் தகுந்தாற் போல், தங்கள் இயக்க ஆற்றல், துணையாற்றல், பொருள் நிலை ஆற்றல், கருவிநிலையாற்றல் ஆகியவற்றை எடையிட்டுப் பார்த்து அதைச் செயல்படுத்துவதே திட்டமிட்ட கட்டுக்கோப்பான, வரைமுறையான விடுதலை முயற்சியாகும் என்று நாம் கருதுகின்றோம்.

இனி, விடுதலை முயற்சி அதன் செயல் கட்டங்களுக்கு ஏற்ப எவ்வாறு அமைதல் வேண்டும் என்பதைப் பற்றியும், எதன் அடிப்படையில் வெளிப்படல் வேண்டும் என்பதையும், அம் முயற்சிகளுக்கு, நம் நாட்டைப் பொறுத்த அளவில், நம் மக்களைப் பொறுத்த அளவில் நாம் செய்யவிருக்கும் உரிமைப் போராட்டம் மக்கள் புரட்சியாக இருக்குமா, அல்லது கருவிப் போராட்டமாக இருக்க வேண்டுமா, எது சரி என்பன பற்றியும் அடுத்து வரும் கட்டுரையில் விளக்கமாகப் பேசுவோம்.

- தென்மொழி, சுவடி :24, ஓலை 5, 1988