பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308

வேண்டும் விடுதலை



 
சிறுசிறு நன்மைகளும் சலுகைகளும்
இனத்தை ஈடேற்றிவிட முடியாது


நாம் விரும்பியது போல், தமிழின நலம் கருதும் கலைஞர் ஆட்சி - திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி – தமிழகத்தில் அமைந்துவிட்டது. இந்த ஆட்சி மாற்றமே நமக்கு மகிழ்ச்சி தருவதன்று. மேலும் நாம் மகிழுவதென்பதே இல்லை; நம் இன நல நோக்கம் நிறைவேறும் என்று நம்பிக்கை தோன்றும் வரை நமக்கு எத்தகைய செயல்களும் மகிழ்வூட்ட முடியாது. கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது – என்னும் திருவள்ளுவக் கொள்கையுடையவர்கள் நாம்! எனவே, இவர்களின் ஆட்சிப் பேறு தற்காலிகமான ஒரு வல்லாளுமைத் தடுப்பு என்ற நாம் கருத முடியும், மள மளவென்று பொங்கிப் பாயும் வடவாரிய ஆற்று வெள்ளத்தை அணைகட்டித் தடுக்கும் ஆற்றலாகவே கலைஞரையும், தி.மு.க.வையும் நாம் கருதுகிறோம். மற்றபடி இவர்களின் ஆட்சியமைப்பே தமிழினத்திற்கான முழு விளைவையும் – விடிவையும் ஏற்படுத்தித் தரும் என்று நாம் எதிர்பார்த்து விட அன்று, நம்பி விடவும் முடியாது. அவ்வாறு நாம் நம்பிவிடும் அளவிற்கு இவர்களும் இதுவரையும் – ஏறத்தாழ 10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த போதும் கூட - தமிழின விடுவிப்புக்கான எந்த முயற்சியும் செய்துவிடவில்லை – என்பதை நாம் உணர்வோம். முதலில், இவர்களிடம் அன்று, பெரியாரிடம் இருந்த திராவிட உணர்வையே நாம் ஏற்றுக்கொள்ளவில்லை.