பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

310

வேண்டும் விடுதலை

வரலாறு கூறுகிறது. 'மன நலம் நன்குடைய ராயினும், சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து' என்னும் பொய்யா மொழியை ஓர்க!

நம் முன்னேற்ற முயற்சிகளுக்கான இறுதித் தலைமுறை இது; இறுதி நூற்றாண்டும் இதுதான். எனவே, நாம் இப்பொழுதைக்குப் பெற வேண்டுவன ஆட்சி நன்மைகள் அல்ல; இன, நாட்டு உரிமைகள் மீட்பே! கலைஞரும் அவரின் தோழர்களும் மிகத் துணிவாகவும் அதேபொழுது மிகவும் எச்சரிக்கையாகவும் – 'தூண்டில்காரனுக்கு மிதப்பு மேல் கண்' என்றவாறு – நம் தலையாய குறிக்கோள் மேல் எப்பொழுதும் கண் வைத்து, காது வைத்து, மனம் வைத்துச் செயலாற்ற வேண்டும்.

'தூக்கத்தில் உளறினாலும் தூய்தமிழ் உளறும் என் வாய்' – என்பார் பாவேந்தர். அவ்வாறான முறையில் "தூக்கத்தில் உளறினாலும் இனநலமே உளறுமாறு" இவர்களின் உணர்வு, அறிவு, செய்ல அனைத்தும் – கொண்ட குறிக்கோளில் – அல்லது – கொள்ள வேண்டிய குறிக்கோளில் - நாட்டத்தோடு இயங்குதல் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இம் முயற்சியில் எந்த ஒரு சிறு புறக்கணிப்போ, தோல்வியோ கண்டாலும் தமிழினம் இன்னும் ஐநூறு ஆண்டுகளில், முன்னைய வரலாற்றுச் சிறப்புடைய உரோமானிய, கிரேக்க இனங்களைப் போல் அழிந்துவிடும் என்பது அழிக்க முடியாத உறுதி, உறுதி! எண்ணிப் பாருங்கள்!

– தமிழ்நிலம், இதழ் எண். 17 பிப்ரவரி 1989