பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

315

அதிகாரப் பங்கீடு தொடர்பாகப் பேச்சுரையாடல் நடத்தியதில் கூட, இராசீவ், தமிழீழக் கோரிக்கைக்குச் சிங்கள அரசு எவ்வகையானும் இசைந்து விடக் கூடாது என்பதில் பிரமதேசாவிற்கு பல வகையான எச்சரிக்கைகளைக் கொடுத்துள்ளார். எது எவ்வாறாயினும், தமிழர்களுக்கென்று தமிழீழம் என்றொரு தனிநாடு அமைந்துவிடாமல் இருக்க, இராசீவ் முன்கூட்டியே எத்துணை விழிப்பாகச் செயல்பட வேண்டுமோ அத்துணை விழிப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

இதுபோலவே கடந்த பிப்ரவரி தேர்தலில், தமிழ்நாட்டில், வேறு கட்சி ஆளுமைக்கு வந்துவிடக் கூடாது என்பதில் இராசீவ் காட்டிய அக்கறையும், ஆர்வமும், சொல்லுந்தரமன்று. பின்னர், அவர் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாகவும் வேறாகவும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்றியவுடன், அந்நிலைக்கு மூப்பனாரே முழுக் காரணம் என்று காரணம் காட்டி, ஒருவாறு தமக்கு நேர்ந்த இழிநிலையையும் பழிநிலையையும் சரிகட்டிக் கொண்டதுடன், அடுத்து நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலிலும் அந்நிலை நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, முன்னர், வேண்டாம் என்று ஒதுக்கிய செயலலிதா அ.தி.மு.க. அணியைத் தம் கட்சியுடன் இணக்கப்படுத்திக் கொண்டார்.

அத்துடன் நில்லாது, தமிழ் நாட்டிலும், மற்ற சில, மாநிலங்களிலும், ஆட்சிக்கு வந்துவிட்ட எதிர்க் கட்சிகளின் வலிவையும் அதிகார நிலையையும் குறைககும் நோக்கத்துடனும், தம் ஆட்சி அதிகாரங்களை விரிவுபடுத்தும் எண்ணத்துடனும், கருநாடக அரசைக் கவிழ்த்ததுமன்றி, சிற்றூர்ப்புற ஐந்தாய (பஞ்சாயத்து) ஆட்சியை விரிவுபடுத்தவும் அவற்றுடன் நேரடித் தொடர்பு கொள்ளவும் இக்கால் ஆழமாகக் கருதி முடிவு செய்து செயல்பட்டு வருகிறார். அதற்கென ஆட்சியியல் சட்டத்திலும் திருத்தம் கொண்டு வர விருக்கிறார்.

இந்தியாவைப் பொறுத்தவரை, நடுவண் ஆட்சி எப்பொழுதும் இந்தியத் தேசிய இனங்களுக்கு மாறான ஆட்சியே! அதுவும் தமிழ்த் தேசிய இனத்திற்கு, வேறு எந்தத் தேசிய இனத்தை விட முற்றிலும் வேறான ஆட்சியே! இத்தனை மாறுபாடுகளையும் வேறுபாடுகளையும், தம் வல்லதிகாரத்தாலும், சூழ்ச்சிகளாலும் அடக்குமுறைச் சட்டங்களாலும், அடியோடு துடைத்து, அழித்து விட்டுத் தில்லியை ஆளும் முதலாளியமும் பார்ப்பணியமும்