பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

320

வேண்டும் விடுதலை

கோரிக்கைக்கும் இடமில்லை. ஏனெனில் தனிநாடு கேட்கின்ற உணர்வே தோன்றாதவாறு, நடுவணரசு, தன் நேரடி அதிகாரத்தின் கீழ் உள்ள சிற்றூர்ப்புறங்களை (அஃதாவது கிராமங்களை)ச் செய்து விட முடியும். இன்னும் தெளிவாகச் சொல்வதானால், இப்பொழுது, மாநில எல்லைக்குள் வானொலி நிலையங்களும், தொலைக்காட்சி நிலையங்களும் இருந்தாலும், அவை எவ்வாறு மாநில ஆட்சியாளர்களைப் பொருட்படுத்தாமல், நடுவண் அரசு சொல்கிறபடி - இராசீவ் விருப்பப்படி நடந்துகொள்கின்றனவோ, அப்படியான நிலையில் ஐந்தாய ஆட்சி அமைப்புகள் நடந்து கொள்ளும். எனவே அவற்றின் கீழ் உள்ள மக்களும் அப்படியே நடந்து கொள்வர். மாநில அமைச்சர்களையோ, அவர்கள் கட்சியையோ அவை பொருட்படுத்த வேண்டிய தேவையே இல்லை! இதில் ஆண்கள் பெண்கள் அனைவரும், நடுவணரசு ஆட்சிக்குக் கட்டுப்பட்ட பெட்டிப் பாம்புகளைப் போல் அடங்கிக் கிடப்பர். மாநில உரிமைகள் என்பவற்றைப் பற்றியோ, அவற்றை வாங்கித் தருவதாகக் கூறும் மாநில அரசுகளைப் பற்றியோ, அவர்கள் கவலைப்படவோ, அக்கறைப்படவோ தேவையில்லாத நிலையில் உயர்ந்துவிடுவார்கள்.

நடுவணரசுக்குகந்த இந்த வாய்ப்பான சூழ்நிலையில், சவகர் வேலை வாய்ப்புத் திட்டம் மட்டுமன்று, இந்திரா நீர்வசதித் திட்டம், இராசீவ் சாலை வசதித் திட்டம், பிரியங்கா கல்வியமைப்புத் திட்டம், இராகுல் தேசியக் குடும்பத் திட்டம், என்று இராசீவுக்கு இனிமேல் பிறக்கப் போகிற பெயரன்கள், பெயர்த்திகள் ஒவ்வொருவரின் பெயராலும் திட்டங்களைத் தீட்டிக்கொண்டே போகலாம் என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுதல் வேண்டும் என்க.

தமிழ்நாட்டில் இராசீவின் வீழ்ச்சிக்குப் பின்னர், அவர் மூளையில் தோன்றி, உருசியப் பின்னணியில் உருவாக்கப் பெற்றதே ஐந்தாய ஆட்சித் திட்டம். இவ்வொரே திட்டத்தில் மாநில உணர்வுகள், விடுதலை உணர்வுகள், மாநிலத் தேசிய இன உணர்வுகள் அனைத்தையும் வீழ்த்திவிட்டு இவ் விந்தியாவையே இந்திரா பாரத் ஆக்கப் போகிறார் இராசீவ். பொறுத்திருந்து பாருங்கள்.

மற்றபடி இத்திட்டத்தைப் பற்றி எதிர்க்கட்சியினர் அனைவரும் எவ்வளவோ எதிர்ப்புக் காட்டினர். இருப்பினும் இவ் வைந்தாய ஆட்சி பற்றிய சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியே விட்டார்,