பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

323

அடையாளமின்றித் தரையோடு தரையாக மண்ணோடு மண்ணாகவே தேய்த்து ஒன்றுமில்லாமல் செய்துவிடப் பார்க்கிறார். இதை அவரால் செய்ய முடியுமோ முடியாதோ, ஆனால் அவர் இறுதி முயற்சியாக உறுதி கொண்டு செய்ய முற்பட்டுவிட்டார் என்றே கருத வேண்டியிருக்கிறது.

தமிழினத்தின் மொழி, இன, நாட்டு உரிமைகள் படிப்படியாக இராசீவால் பறித்தெடுக்கப்படுகின்றன. தமிழ்மொழியை மூன்றாந்தர நாலாந்தர மொழியாகவே நடுவணரசு மதிப்பிடுகிறது. உலகின் மூல முதல் மொழியாகிய தமிழ், ஏதுமற்ற இந்தி மொழிக்கு மிக மிகத் தாழ்வான மொழியாகவே மதிக்கப்படுகிறது. உருப்படியான ஒரு சிறப்பையும் கொண்டிராத, இலக்கண வழுக்களும் மிகப் பிந்திய இலக்கியங்களையும் கொண்டுள்ள இந்தி மொழிக்கு ஆண்டுக்கு நூறு கோடி உருபா செலவிட்டால், இலக்கிய இலக்கணச் செழுமையுற்று விளங்கும் நம் தாய்மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு கோடி உருபாவே செலவிடப் பெறுகிறது. அதுவும் அந்தத் தமிழையும் பார்ப்பனத் தமிழாகவே வளர்த்தெடுக்க விரும்புகிறது.

இனி, இன நிலையில் நம் இனத்தவர்கள் தமிழர் என்று தங்களை எழுத்தளவில், பள்ளிச் சான்றிதழ், ஒப்போலைப் பதிவுகள், பிற அரசுப் பதிவேடுகள், எல்லைக்கடவுகள் முதலியவற்றில் பதிந்து கொள்ளவும் உரிமையற்றவர்களாகவே உள்ளார்கள். வேறு பிற திராவிட மொழியினத்தவர்கள், தங்களைத் தெலுங்கர், கன்னடியர், மலையாளர், குசராத்தியர், வங்காளியர், மராட்டியர் என்று தங்கள் இனத்தின் பெயர்களை அரசுப் பதிவேடுகளில் பதிவு செய்து கொள்ள உரிமை இருக்கும்பொழுது, தமிழர் மட்டும் 'இந்து' என்னும் மதந்தழுவிய பெயரையும், பிள்ளை, முதலி, படையாச்சி, செட்டி, கவுண்டர் என்னும் சாதி தழுவிய பெயரையும் மட்டுந்தாம் பதிவுசெய்து கொள்ள முடியும் என்றால், இஃதென்ன கொடுமை ! ஏன் தமிழர் மட்டும் தங்கள் இனப்பெயரைப் பதிவுசெய்து கொள்ள உரிமையில்லாதவர்களாக வேண்டும்?

இனி, தமிழினத்தின், தமிழ்நாட்டின் சிறுசிறு உரிமைகளுக்காக ஏன் அவ்வப்பொழுது தில்லியரசை நாடிப் போக வேண்டும்? கல்வி, வணிகம், தொழிலமைப்பு, உணவு, இதழ் வெளியீடு போன்ற நூற்றுக்கணக்கான இன்றியமையாத தேவைகள் ஒவ்வொன்றிற்கும்