பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

325

நடிக்கிறதென்றால் அல்லது நாடகமாடுகிறதென்றால், அதுவும் தனக்கு வலிவு தேடிக்கொள்ளவோ தனக்குக் கிடைத்த பதவியை நிலைநிறுத்திக் கொள்ளவோ, அல்லது மறைமுகமாகத் தங்கள் விட்டுக் கொடுப்பு அல்லது இனக் காட்டிக் கொடுப்பு நிலைகளுக்குப் பொருளியல் நிலையில் நன்றி தேடிக் கொள்ளவோதான் இருக்க முடியும். இத்தகையவர்களுக்கு அழிக்கப்பட்டு வரும் தமிழினத்தைப் பற்றியோ, பெருமை குறைக்கப்பட்டு வரும் தமிழ்மொழியைப் பற்றியோ, நாளுக்கு நாள் பறிபோய்க் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு உரிமைகளைப் பற்றியோ அக்கறையோ கவலையோ எவ்வாறு இருக்க முடியும்?

ஏதோ அரசியல் ஆளுமை உரிமைகளுக்காகப் போராடுவதாக இங்கு ஆட்சிக்கு வரும் மாநில அளவிலான கட்சிகள் அவ்வப்பொழுது பெயர் பண்ணிக் கொண்டு, விளம்பரம் தேடிக் கொள்வதுதான் மிச்சம்! மற்றபடி, இங்குள்ள தன்மானத்(!) தமிழர்கள் இராசீவுக்கு ஆட்சியரண் சேர்ப்பதற்குப் பேரம் பேசும் தரகு முதலாளிகளாகவேதாம் இருக்கிறார்கள்.

இதுவரை இங்கு ஆட்சிக்கு வந்த, வரும் அதிகாரக்காரர்கள் செய்த அரசியல் முயற்சிகளால் அப்படி என்ன நன்மை ஏற்பட்டு விட்டது? இவர்கள் இங்குள்ள அரைக்காலே வீசம் ஆளுமை உரிமைக்காக நடுவணரசுடன் போராடும் அரசியல் முயற்சிகள் தேவையே இல்லை. ஒட்டுமொத்தமான இனநல முயற்சிகளே தேவை! இனநலமே எதனினும் பெரியது! வலியது! எதிர்கால வளர்ச்சிக்கு அடிப்படையானது!

"மனநலம் நன்குடையராயினும், சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து" "மனநலத்தினாகும் மறுமை; மற்றஃதும் இனநலத்தின் ஏமாப்புடைத்து" - என்பன நம் இனக்காப்பு நூலாகிய திருவள்ளுவம் நமக்குக் கற்பிக்கும் நெறிமுறைகள்.

"இனம் நலமாக - வலிவுள்ளதாக - இருக்கும் நிலையில்தான், அது, நம் மனநலத்தால் பெற்ற - பெறுகின்ற அறிவு நிலைகள் ஆகிய இலக்கியம், இலக்கணம், மொழி, வாழ்வியல், அறிவியல் முதலியவற்றையும், மனநிலைகள் ஆகிய கலை, பண்பாடு, ஒப்புரவு, உலகியல், பொதுமை முதலியவற்றையும், அறநிலைகளாகிய சமன்மை, பொதுவுடைமை, அரசியல், அறவியல் முதலியவற்றையும் நாம் கட்டிக் காத்துக் கொள்ள முடியும்” என்பது முதல் குறள் நெறியின் திரள் கருத்து.