பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

328

வேண்டும் விடுதலை

முதிர்ச்சியையும் பெற்றிருப்பதும் ஆகும். எனவே, அனைத்து இந்தியத் தேசிய இனங்களை விட, இந்திய வடநாட்டுப் பார்ப்பனிய, வணிக வல்லாட்சியினின்று, முதன் முதலில் பிரிந்து போகும் முகாமைத் தேவையும், இன்றியமையாமையும், முதல் உரிமையும் பெற்று விளங்குவது தமிழ்த் தேசிய இனமே ! அதனால்தான் தமிழகம் முழு இறையாண்மை கொண்ட தனி முழு ஆட்சியுள்ள தனிநாடாக ஆகவேண்டும். அந்தக் கருத்துக்கு இங்குள்ள தமிழ் மக்களை இசைவுடையவர்களாக அணியப்படுத்த வேண்டும் என்பது நம் அழுத்தமான, என்றும் மாறாத கொள்கையாக இருப்பதுடன், அதற்கான முயற்சிகளில் இடையறாமல் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்பது நம் நோக்கமாகவும் இருக்கிறது.

'இந்தியா பிரியக்கூடாது; இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு மொழி பேசுபவர்களாகவும், பல்வேறு கலை, பண்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும், உடையவர்களாகவும், இருந்தாலும் பல்வேறு சாதிப் பிரிவுகளையும் மதப் பிரிவுகளையும் கொண்டவர்களாகவும் இருந்தாலும் அவர்கள் தங்களின் வேறுபாடுகளையும் பிரிவுகளையும் மறந்து(!) ஒற்றுமையுடையவர்களாகவும், ஒருமையுணர்வு பெற்றவர்களாகவும் இந்திய தேசியம் என்னும் ஒரு நாட்டுணர்வு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்' என்று இக்கால், வரலாறும், வாழ்வியலும் அறியாத பலரும் கூறிக் கற்பனைக்கனா கண்டு வருகிறார்கள்.

இந்தியா யார் அப்பன் வீட்டுச் சொத்தும் இல்லை; அது இங்குள்ள தேசிய இனங்கள் அனைத்துக்கும் சொந்தமான சொத்து ஆகும். இதை முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆண்ட வெள்ளைக்காரர்களை ஏமாற்றி, அல்லது சமநிலைத் தரகு (பேரம்) பேசி, அவர்களிடமிருந்து எக்குத் தப்பாக - ஒற்றுக்குத்தலாகத் தங்கள் ஆளுமைக்கு ஏற்றுக் கொண்ட வடவாரியப் பார்ப்பனரும், வல்லரசுகளின் அடிநிலை முதலாளிகளும், இந்தியா பிரியக் கூடாது, பிரிக்க விட மாட்டோம் என்று ஏகடியமும் எகத்தாளமும் கொண்டு பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று எண்ணிப் பார்க்க வேண்டும். இங்கு, பிரிவினை கூடாது என்று கூறுவதற்குப் பிறர்க்கு எத்துணை உரிமை உண்டோ, அத்துணை உரிமை உண்டு, நாங்கள் பிரிவினை வேண்டும் என்பதற்கும்!

இந்தியா ஒன்றாக இருக்க வேண்டும் என்பது ஒரு