பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

330

வேண்டும் விடுதலை

பிரிந்து போய், முழு உரிமையுள்ள தனி நிலை ஆட்சி அமைத்துக் கொள்ள விரும்பும் ஓரினத்தைச் சட்ட திட்டங்களாலும், ஆளுமைத் தந்திர சூழ்ச்சிகளாலும் அடக்கு வன்முறைகளாலும், கிடுக்குப் பிடி போட்டு, ஒடுங்கியே கிட என்று சொல்வது எந்த வகையில் மாந்த நேயமும், மக்கள் ஞாயமும் ஆகும் என்று நம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

மாமியார், மாமனார், நாத்தனார் கொடுமைக்கும் தாக்குதலுக்கும் உரிமையிழப்புக்கும் ஆளான மருமகள், தன் கணவனுடன் தனிக் குடித்தனம் நடத்த விரும்பினால், அதை அம் மாமியார் மாமனார் தடுப்பது எவ்வகையில் ஞாயம், அறம் ஆகும்! அதுபோன்றதுதான் தனிநாட்டு விடுதலைக் கோரிக்கையும் என்று நாம் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு ஞாய வழியில் அறவழியில் கருதாமல் அம் மாமியாரும் மாமனாரும் தங்கள் ஆளுமை அதிகாரம் போய்விடக் கூடாதே என்பதற்காக, குடும்ப ஒற்றுமை குலைந்து போகும், வலிமை குறைந்து போகும் என்றெல்லாம் ஞாயம் பேசுவது, இயற்கை நெறிக்கும் உயிர்வாழ்க்கை முறைக்குமே எதிரானது, கேடானது என்பதை நாம் உணர்ந்து பார்க்க வேண்டும்.

இவ் விழிநிலைக் கோட்பாடுகளால் இந்தியா பிளவுபடக் கூடாது என்பதற்கோ, தமிழ்நாட்டுப் பிரிவினை கூடாது என்பதற்கோ, அல்லது இங்குள்ள தேசிய இனங்கள் பிரிந்து போக ஒப்பமாட்டோம் என்பதற்கோ யாருக்குமே உரிமையில்லை என்று தெளிவாக உணர்ந்து கொள்க!

தேசிய இன விடுதலை இயற்கையானது; தேவையானது!

— தமிழ்நிலம், இதழ் எண். 133, திசம்பர், 1990