பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

333

பார்ப்பனப் பாவலன் பாரதியையும் பின்னிறுத்தி நடத்தப் பெறும் இந்திய ஆட்சி ஒரு கொடுங்கோல் ஆட்சி, கொள்ளையர் ஆட்சி; கொலைகாரர் ஆட்சி வல்லதிகார ஆட்சி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

இந்தச் சூழ்நிலையில் இனிமேலும், இந்திய நடுவண் அரசுடன் தமிழின மக்கள் அரசியல் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. எத்தனை வழக்காடினாலும், ஞாயம் பேசினாலும், வடநாட்டானும் ஆட்சித் தலைமையைப் பிடித்துக் கொண்டிருக்கும் பார்ப்பானும் தமிழினத்தை மதிக்கமாட்டார்கள் அவர்களுக்கு உரிமைகளை வழங்க மாட்டார்கள். இவர்களுக்காகவே இவர்களே எழுதி வைத்துக் கொண்டிருக்கும் சட்டங்களும் அதிகாரங்களும் அறமன்றங்களும் இவர்களுக்குத் துணையாகவே இருக்கும். இந்த நிலையை எந்த மாநில அரசாலும் என்றைக்கும் மாற்றவே முடியாது. இன்னும் குறிப்பாகத் தமிழ்நாட்டு அரசைக் கைப்பற்றும் எந்தக்கட்சி ஆட்சியும் கூட இவர்களைத் தட்டிக் கேட்கவோ, தங்களின் வாழ்வுரிமைகளைப் பெறுவதற்கோ முயற்சி செய்யாது; செய்ய முடியாது. இந்தியா உரிமை பெற்று நாற்பத்து நான்கு ஆண்டுகளாகியும். தமிழர்கள் திராவிடர்கள் என்று இம்மாநில ஆட்சியைக் கைப்பற்றிய எங்கும் கூட அவ்வாறு செய்ததில்லை. செய்வதற்கு முயற்சி செய்வதும் கூட இல்லை.

இறுதியாக, தமிழக அரசுப் பொறுப்பைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்றிருந்த கலைஞரின் தி.மு.க. அரசு கூட மாநில ஆட்சி என்ற அளவில்தான், வடநாட்டாருடனும் தமிழினத்தின் கழுத்தை அரிந்து கொண்டிருக்கும், பார்ப்பனருடனும் கூடிக்குலவி, தனிப்பட்ட தங்களின் நன்மைக்கும், பதவி நலத்திற்கும், அதிகார வாய்ப்பிற்குமாக ஆட்சி நடத்தியதே தவிர, தமிழுக்கென்றோ தமிழினத்தின் நிலையான அடிமை நீக்கத்திற்கென்றோ, தமிழ் நாட்டின் உரிமை மீட்சிக்கென்றோ எந்த ஒரு செயலையும் செய்ததில்லை. வள்ளுவர் கோட்டமும், பூம்புகார் அமைப்பும், கன்னியாகுமரியில் அமையவிருக்கும் திருவள்ளுவர் சிலையும், இலவயக் கல்வியும், சாரவுணவும், இலவய அரிசியும் வேட்டி சேலைக் கொடுப்பும் அரசியலும் அன்று ஆட்சியியலும் அன்று: இனமீட்பும், உரிமை மீட்சியும் அல்ல! வெறும் ஏமாற்றும் கண்துடைப்புமே ஆகும். நாற்பது இலக்கம் உறுப்பினர்கள் உள்ள கட்சி எங்கள் கட்சி என்று பீற்றிக் கொள்ளும் தி.மு.க. பின்பற்றிகளுக்கும், ஏன் கலைஞர்க்குமே சொல்லிக் கொள்கிறோம்!