பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

வேண்டும் விடுதலை

வங்காளிகளின் உள்நாட்டு எழுச்சி, இந்திய இலங்கை ஏதிலிகளின் பரிமாற்றம், பருமிய - இந்தியரின் உடைமைப் போராட்டம், இன்னோரன்ன பற்பல துணைக் காட்சிகள், இக் காட்சிகளுக்கிடையிடையே தொங்க விடப்பெறும் திரைச் சீலைகளின் உள்ளிருந்து கொண்டு முழக்கப் பெறும் தேசிய இசை, இந்தி விளம்பரம் ஒருமைப்பாட்டின் பின்பாட்டு! இதுதான் இந்திய அரசியல்!

மூக்கு உள்ள வரை சளியும் போகாதது போல், இந்தியா உள்ளவரை அதன் வடகிழக்கு எல்லையில் பரந்து விரிந்துகிடக்கும் சீனாவும் அதன் வடமேற்கு எல்லையில் இணைந்து கிடக்கும் பாக்கித்தானும் அவற்றின் சலசலப்புகளும். முர முரப்புகளும் என்றைக்கும் போகா. இவ்வார்ப்பாட்டங்கள் உள்ளவரை இந்திய அரசியல் நாடகத்தில் என்றைக்கும் ஒரே கதைதான்! கதையின் வழக்கமான காட்சிகள் தாம். காட்சிகளுக்கு இடையே ஒரே பின்பாட்டுத்தான். எவருக்கும் இதில் எள்ளளவும் ஐயப்பாடு வேண்டா. வேண்டுமானால் பேச்சுக்காகக் கொஞ்சகாலம் நிகரமைக் கொள்கையைப் பேசலாம்; சிறிது காலம் பொதுவுடமைக் கொள்கைக்குத் துணைநிற்கலாம்; சில காலம் பேராயக்கட்சி அரசேற்கலாம்; சிலகாலம் பிறகட்சிகள் ஆட்சி செய்யலாம் ; ஆனால் இம்மாற்றங்களெல்லாம் நாடக நடிகையர், இசைக் குழுவினர் மாற்றங்கள் போல் நாடகக் கதைக்கும் காட்சிகளுக்கும் புறம்பானவையாகவே இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளல் வேண்டும்.

இந்தியாவின் இத்தகைய குழப்பங்கள் இந்திய மக்களையே மூச்சுத் திணற வைத்துக் கொண்டுள்ளன. இனி இவற்றைவிட இந்தியாவின் உள்ளீரலையே பற்றிக் கொண்டிருக்கும் நோய்கள் பல. அவை இங்குள்ள குல, சமய வேறுபாடுகள், தென்னாட்டு வடநாட்டுப் பார்ப்பனரின் உள்ளரிப்புகள், அவற்றின் அடியாக எழுந்த மூடநம்பிக்கைகள் முதலியவை. இவற்றைப் பற்றிய சிக்கலைத் தீர்ப்பதற்கு எந்த உலக ஒன்றிப்பும் முன்வராது. இச்சிக்கல்களுக்குள் அறிந்தோ அறியாமலோ மாட்டிக் கொண்டிருக்கும் கட்சி பேராயக் கட்சி. வாகாகக் கிடைத்த இக்கட்சியின் சிணுக்கு துணிகளைக் கைகளில் பிடித்துச் சில பணக்கார முதலைகளும், சமயத் தலைவர்களும் எந்த அளவுக்கு இந்தச் சிணுக்குகளை அவிழ்த்து நூல்களை உருவிக் கொள்ள முடியுமோ, அந்த அளவில் உருவிக் கொண்டிருக்கும் தவிர்க்க முடியாத ஒரு தந்திரப் போக்கு, உலக