பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

338

வேண்டும் விடுதலை

கோணங்கள்(வியூகங்கள்) அமைத்து, இங்குள்ள படையைத் தந்திரக் கரவாக அங்கு அனுப்பி, முற்றிலும் தமிழர்களையும் தமிழின வரலாற்று நாயகன் பிரபாகரனையும் அழித்தொழிக்கத் திட்டமிட்டது; ஏறத்தாழ இரண்டாண்டுகளாகியும் இரண்டாயிரங் கோடி உருபா செலவிட்டும், அவ் விமயமலை வீரனை இம்மியும் அசைக்கவும் முடியாமல், எதிர்த்து நிற்கவும் இயலாமல், தோல்வி வெட்கத்துடன் இந்தியா திரும்பியது. அதற்குள் இராசீவின் கொடுங்கோலாட்சிக் கதையும் முடிந்து போனது அதுவுமின்றித் தமிழகத்திலும் தி.மு.க. ஆட்சி வந்தது. தில்லியிலும் தேசிய முன்னணி, ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனாலும், இலங்கையில் பிரபாகரன் வலிமை பெற்றிருப்பது பார்ப்பனர்களுக்குப் பிடிக்கவில்லை.

தமிழகத்திலுள்ள கலைஞராட்சிக்கும், தமிழீழத்தில் வலிமை பெற்றுள்ள விடுதலைப் புலிகளுக்கும் தொடர்புபடுத்தி அவ்வப்பொழுது எதையேனும் தேசிய முன்னணி அரசுத் தலைமைக்கு எரிச்சல் வரும்படி சொல்லிக் கொண்டு வருகின்றனர். அத்துடன் தமிழகத்திலும் வன்முறை, பிரிவினை உணர்வு, அவற்றுக்குக் கலைஞர் ஆதரவு என்றெல்லாம் கூறி, நடுவணரசு உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று துண்டி வருகின்றனர்.

இந்த நிலையில், பார்ப்பனர்களுக்கு நாம் வெளிப்படையாக ஒன்றைச் சொல்லிக் கொள்ளுகிறோம். "இந்தியாவில், பார்ப்பனீய, முதலாளியங்களின், இன, அரசியல் தாக்குதல்கள் இருக்கும்வரை இந்திய ஒருமைப்பாடு, ஒற்றுமை என்னும் போலியுணர்வுகள் வெற்றி பெறப் போவதில்லை. மாறாக அவற்றுக்கு இனி என்றுமே தோல்விதான்! அது மட்டுமன்று, அவ்வினம் அஞ்சிக் கொண்டிருக்கும் பிரிவினை உணர்வும் வளர்ந்தே தீரும்" – என்பதைப் பார்ப்பனர்கள் ஆழமாகத் தங்கள் உள்ளங்களில் பதித்துக் கொள்வார்களாக

— தமிழ்நிலம், இதழ் எண். 137 ஏப்பிரல், 1990