பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

344

வேண்டும் விடுதலை

தமிழர்களுக்கு நேர் எதிரானவர். இதற்கு முன்னர் இருந்த முதல்வர்களைக் காட்டிலும் இவர் பெரும் கன்னட வெறியர். இவர் பதவிக்கு வந்த பின் கர்நாடகத்தில் வாழும் தமிழர் முன்னேற்றத்தில் ஒரு கண்ணாக இருந்து அவர்களைப் பலவகையிலும் ஒடுக்க முற்பட்டார்.

பணி நிலைகளில் தமிழர்களுக்குக் கிடைத்து வந்த வாய்ப்புகளைக் குறைத்தார். கல்வி நிலையிலும் தமிழ்க்கல்வியைப் பின்தள்ளிக் கன்னட மொழிக்கே அனைத்து வாய்ப்புகளையும் உருவாக்கித் தந்தார். கன்னடம் படித்தவர்க்கே அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கினார். தமிழர்கள் புதுத் தொழில் தொடங்குவதற்கும் வாணிகம் செய்வதற்கும் பல முட்டுக் கட்டைகளைப் போட்டார்.

எனவே, தமிழர்கள் அங்குப் பலவகையிலும் தொல்லைகளே பெற்று வந்தனர். அவர்கள் வீடுகள் கட்டவும், நிலங்கள் வாங்கவும் வாய்ப்பின்றி மிகவும் இடர்ப்பட்டு வந்தனர். அதனால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் பெங்களுரை விட்டே வெளியேறிப் போயினர்.

பங்காரப்பா ஆட்சிக்கு வந்த நேரம், தமிழகத்திலும் ஆட்சி மாறியது. செயலலிதா தாம் பதவிக்கு வந்த பின், முன்பு விடுதலைப் புலிகளுக்கும், தமிழீழப் போராட்டத்திற்கும் ஆதரவாயிருந்த நிலையை மாற்றிக் கொண்டு, அவர்களை ஒடுக்கும் செயலிலும், அவர்களை அறவே தமிழகத்திலிருந்து வெளியேற்றும் நிலையிலும் வெகு முனைப்புக் காட்டினார்.

காரணம் விடுதலைப்போராளிகள் எங்கு தி.மு.கவுக்கு ஆதரவாக இருந்து தம்மைக் கவிழ்த்து விடுவார்களோ அல்லது அழித்து விடுவார்களோ என்று அஞ்சினார். எனவே, அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்.

இந் நடவடிக்கைகள் கர்நாடகத்திலும் குறிப்பாகப் பெங்களூரிலும் விரிவடைந்த பொழுது, பங்காரப்பா செயலலிதாவிற்கு அனைத்து வகையிலும் துணையாக இருந்தார்.

இருவரும் கன்னடத் தாய்மொழியினர். ஆகையால், தமிழீழ எதிர்ப்பு முயற்சிகளைக் கைகோத்துக் கொண்டு செயல்படுத்தினர். போராளிகள் பலரைப் பெங்களூரிலிருந்து சிறைப்பிடிக்கவும் அழிக்கவும் கர்நாடக முதல்வர் பங்காரப்பா, தமிழக முதல்வர் செயலலிதாவிற்குப் பெரிதும் துணையாக நின்றார்.