பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

346

வேண்டும் விடுதலை

நிலையில், இந்நீர்ப் பகிர்வு ஒப்பந்தம், முதன் முதலில் 1892-ஆம் ஆண்டிலும், அதன்பின் அது சில திருத்தங்களுடன் 1924-ஆம் ஆண்டிலும் அன்றைய மைசூர் அரசும், சென்னை மாகாண அரசும் செய்துகொள்ளப்பெற்றது.

இந்த ஒப்பந்தம், மேலும் கர்நாடகத்தில் மைசூரில் 1924-இல் ஓர் அணையும், தமிழகத்தில் மேட்டுரில் 1934-இல் ஓர் அணையும் கட்டிக் கொள்ளவும் வழிவகுத்தது.

இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட பொழுதும், அதன்பின்னர் 1956-இல் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பொழுதும், கர்நாடக, தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் அமைப்பு நிலைகள் வேறு வேறு; எல்லைகளும் மாறின. நில அமைப்பு மாறுபாடுகளும் எல்லை மாற்றங்களும் ஒப்பந்தத்தில் சில சிக்கல்களை உருவாக்கிவிட்டன.

அதன்பின்னர் தமிழ்நாடு பவானி ஆற்றுக்குக் குறுக்கேயும், கர்நாடகம் கபினி ஆற்றுக்கு குறுக்கேயும், ஒவ்வோர் அணையைக் கட்டிக் கொண்டன. அதன்பின்னும் கர்நாடகம், தமிழ்நாடு தீவிரமாக எதிர்த்தபோதும், நடுவணரசு இசைவு தராத நிலையிலும், ஏமாவதி ஆற்றுக்குக் குறுக்கேயும், ஆரங்கி ஆற்றுக்குக் குறுக்கேயும் இரண்டாவது மூன்றாவது அணைகளைக் கட்டிக் கொண்டது.

தமிழ்நாடு மறுத்தும், திட்டக்குழு இசைவு பெறாமலும் கட்டப்பட்ட இவ்விரண்டு அணைகளாலும் காவிரிநீர்ச் சிக்கல் மேலும் இறுகியது. இது தொடர்பாக 1968 முதல் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை தொடங்கி இன்னும் தீர்ந்தபாடில்லை. நடுவண் அரசு இந்தச் சிக்கலைக் கண்டும் காணாததும் போலவே நமக்கென்ன என்று இருந்துவிட்டது. அதனால் சிக்கல் மேலும் மேலும் இறுகி, 1970 முதல் 26 பேச்சுகள் நடந்தும் - இன்னும் தீர்வு இல்லாமல் இருந்தது.

அதன் இறுதி முயற்சியாக 1990 சூன்-2-இல் பம்பாய் உயர்நீதிமன்ற நடுவர் சிட்தோசு முகர்சி தலைமையில், காவிரி நீர் பங்கிடுவதற்கான நடுவர் மன்றத்தை உச்சநீதிமன்றத்தின் கட்டளைப்படி நடுவணரசு அமைத்தது.

அந்நடுவர் மன்றம், கர்நாடகம், தமிழ்நாடு இரண்டு மாநிலங்களிலும் பரவலான சுற்றுச் செலவு செய்தும், பார்வையிட்டும், ஆங்காங்குள்ள உழவர்களின் நேரடியான வாய்மூலங்களைக் கேட்டும், அவற்றை நன்றாக ஆய்ந்து, ஆண்டுதோறும், கர்நாடகம்