பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

352

வேண்டும் விடுதலை

அடக்குமுறையாலோ, உருவாக்கப்படுவன அல்ல. அவை ஓர் ஆட்சியின் கீழ் உள்ள மக்களிடையில் தானே உருவாகி, உணர்வு அடிப்படையில் வளர்ந்து மலர்ச்சியடைய வேண்டிய ஓர் அரசியல் மெய்ம்மம் (தத்துவம்) ஆகும். இதை வெறும் கருத்துப் பரப்புதலாலும் (பிரச்சாரத்தாலும்) கலை, பண்பாட்டுக் கூத்துகளாலும் உருவாக்கிவிட முடியாது என்பதைத் தமிழக முதல்வர் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

மக்கள் நலக் கருத்துகளை அவை எந்த வடிவில் எந்தக் கோணத்தில் இருந்தாலும் அவற்றை வளர விடுவதே நலமான மக்களாட்சிக் கோட்பாடாகும். ஆளும் வகுப்பினர் தங்கள் ஆட்சி அதிகாரம் பறிபோய் விடுமே என்னும் அச்சத்தால் அவற்றை அடக்கி ஒடுக்க முற்படுவார்களானால், அவை வெட்ட வெட்டத் தழைக்கும் வெள்வேல மரம் போல் பூதாகாரமாக வளர்ந்து, ஆட்சி அதிகாரங்களையே ஆட்டங்காணச் செய்யும் என்பதே மக்களாட்சி வரலாறாகும்.

இதை நன்றாக உணர்ந்து, அதிகாரமும், காவல்துறையும் தம் கையில் உள்ளது எனும் எக்களிப்பில் முதலமைச்சர் செயலலிதா வரம்பு மீறிய அடக்குமுறைகளையும் ஒடுக்கு முறைகளையும் கடைப்பிடித்து, மக்கள் நலம் கருதும் தலைவர்களையும் சிந்தனையாளர்களையும் சிறைப்பிடிப்பதும், அவர்கள் மேல் வீணான பழிகளையும் குற்றச்சாட்டுகளையும் கூறித் தண்டிக்க முற்படுவதும் ஆட்சியின் எதிர்க் காலத்தையே சிதைப்பதாகும் என்று எச்சரித்துக் கூற விரும்புகிறோம்.

எனவே நலுமான அரசியல் நடைமுறைகளுக்கு வழியமைத்துக் கருத்து வேறுபாடுகளைக் கருத்தளவிலேயே எதிர்கொள்ள முயலுமாறு முதலமைச்சரையும் ஆளும் வகுப்பினரையும் அன்புடனும் கடமையுணர்ச்சியுடனும் கேட்டுக் கொள்வதுடன், சிறைப் படுத்தியுள்ள தலைவர்களை விடுவிக்கவும் வேண்டிக்கொள்கிறோம்.

இவ்வாறு பாவலரேறு பெருஞ்சித்திரனார் தம் அறிக்கையில் கூறியுள்ளார்.

—தமிழ்நிலம், இதழ் எண். 159, அத்தோபர், 1992