பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

வேண்டும் விடுதலை

கொண்டு இருப்பர். தென்னாட்டுக் காமராசரின் கை தென்னக அரசியல் பிடியை நெகிழ விட்டு விட்டதால், இனி அவரின் வடநாட்டுப் பிடியையும் தளர்த்தி விடுவதற்கு வடவர்கள் உறுதிபூண்டு விட்டனர். அவர் ஒருவராகிலும் தென்னாட்டவர்க்கு - குறிப்பாகத் தமிழர்க்குத் தீங்குதரும் வாடைக்காற்றுக்குத் தடுப்புச் சுவராக இருந்து வந்தார். அவரையும். இடித்துத் தள்ளிவிட வேண்டிய ஒரு கட்டாய நிலை இப்பொழுது வடநாட்டு அரசியல் தலைவர்களிடையே ஏற்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. இவர் வழி நின்ற அரசியல் தடுப்பு நீக்கப்படுமானால், பேராயக் கட்சி இங்குள்ள ஓரிரு நாத்தடிப்புக்காரர்களின் வாய்க்கு வரகரிசியாக இருக்குமே தவிர, தமிழர்களின் உரிமை பறிபோகாமல் காக்கும் கைக்கேடயமாக இருக்காது என்பது அழுத்தத் திருத்தமாக நம்பலாம்.

மேலும் இந்தியாவில் பேராயக் கட்சி ஆட்சியில் உள்ளவரை மொழிச்சிக்கலை. இந்திச்சிக்கலை அது தீர்க்காது; தீர்க்க விரும்பாது. இந்திச் சிக்கல் உள்ளவரை பிற தேசிய மொழிகளின் வளர்ச்சிக்கு முகாமை காட்டப்பெறாது. பேராயக் கட்சி பெரும்பாலும் வடவரின் கைக் கோடரியாகவே இருக்கின்ற காரணத்தால், இந்திய அரசியல் அதிகாரங்கள் முற்றும் தில்லியிலேயே குவிக்கப்பட்டுக் கிடக்கும். அவற்றைப் பரவலாக்க வடவர் ஒரு போதும் இசையார். அதுவரை தமிழகத்தில் ஏற்படும் சிறுசிறு சிக்கல்களுக்கெல்லாம் (தமிழகப்பெயர் மாற்றம்: ஆகாசவாணி பெயர் நீக்கம் போன்றவற்றிற்கு) கூட 2000 கற்களுக்கு அப்பாலுள்ள தில்லிக்குப் போய்த்தான் முடிவுகாண வேண்டும். நம் தமிழக அமைச்சர்களும் உறுப்பினர்களும் எவ்வளவு பாடுபட்டாலும் தம் அரசியல் உரிமையை ஓர் அணுவளவுகூடத் தம் விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ள முடியாமல் இருப்பர். இவற்றைப் பற்றியெல்லாம் அரசியல் சட்டத்தில் மிகத் தெளிவாகவும், முன்னெச்சரிக்கையாகவும் எழுதிவைக்கப்பெற்றுள்ளது.

“எந்த ஒரு மாநிலத்திலிருந்தும் அதன் பகுதிகளைப் பிரித்தோ, பிற மாநிலப் பகுதிகளுடன் இணைத்தோ, பல மாநிலங்களை ஒன்றாக இணைத்தோ ஒரு மாநில அமைப்பைப் புதியதாக்கலாம். ஒரு மாநிலத்தின் பரப்பைக் குறைக்கவோ, கூட்டவோ, அதன் எல்லைகளை மாற்றவோ, பெயரை மாற்றவோ, செய்யலாம், இந்த மாற்றங்களைக் குடியரசுத் தலைவர் தம் இசைவுடன் கூடிய சட்ட மன்றத் தீர்மானத்தின் படி பாராளுமன்றம் செய்யலாம்” என்பது அரசியல் சட்டம்.