பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

வேண்டும் விடுதலை

சொல்லளவில் கூறப்படுகின்றதே தவிர “சட்ட அமைப்பில் அந்தப்படியான ஒரு சொல் எந்த ஒரு வரியிலும் எழுதப்படவில்லை” என்று திரு. சி. பி. இராமசாமி உட்பட்ட பெருந்தலைப் பிராமணர்களே உரைத்துப் பெருமைப்பட்டுப் போயிருக்கின்றனர். இதன் உட்பொருள் என்னவெனின், “இந்தியாவிலிருக்கும் வரை இந்துச் சமயமும் இருக்கும் என்பதே!” இந்துச் சமயம் இருக்கும்வரை இங்குள்ளவர் இனம் இனங்களாவும், குலங்குலங்களாகவுமே பாகுபட்டுக் கிடப்பர் என்பது உறுதி. தமிழரும் அப் பாகுபாட்டில் என்றும் நாலாந்தர அடிமைகளாகவே கிடப்பர் என்பதும் அழிக்க முடியாத உறுதி. இந்நிலையில் குமுகாயத் துறையிலும் தமிழர் என்றென்றும் தம் உரிமைகளை இழந்தபடியே இருப்பர் என்பது தெளிவாகின்றது. பொருளியல் அளவில் தமிழகமும் பிற மாநிலங்களும் நடுவணரசின் அடிமையாகவே இருக்கும் என்பதை, அண்மையில் தமிழக முதலமைச்சர் திரு, அண்ணாத்துரை அவர்களுக்கு வட்டி நீக்கம் பற்றியும் அரிசியிழப்பு ஈட்டுத் தொகை பற்றியும் திரு. மொரார்சி தேசாய் விடுத்த விடையிலிருந்து நன்றாக விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.

இவ்வாறு அரசியல், பொருளியல், குமுகாயவியல், மொழி பண்பாடு முதலிய அத்தனைத் துறைகளிலும் தமிழகம் தாழ்த்தப்பட்டுக் கிடக்கின்றதை எந்தக் கட்சி உண்மைத் தலைவரும் ஒப்புக் கொள்ளாமல் இருக்கமுடியாது. இச்சூழ்நிலையில் இந்திய அரசினரின் ஒருமைப் பாட்டு அமைப்பு மராட்டியரின் 'சிவசேனை’ இயக்கத்தாலும், வங்காளியரின் மொழியெழுச்சியாலும், நாகர்களின் விடுதலை வேட்கையாலும் அப்துல்லாவின் தளராத தன்னம்பிக்கையாலும் சிதறியடிக்கப்பட்டு வருகின்றது. இன்னும், “பலகோடி உருபாக்கள் இழப்பானாலும் இந்தி மொழியை நுழைத்தே தீருவோம்” என்று கொக்கரிக்கும் சேத் கோவிந்ததாசு போன்றாரின் வெறிக் கொள்கையும் தென்னவர்க்கு அமைதியும் ஆறுதலும் தருவதாக இல்லை. என்றும் வாய் வாளாத அரசியல் அடிமைகளாகத் தமிழர் கிடப்பதைவிட உரிமைப் போரிட்டுச் செத்துத் தொலைப்பதே மேல் என்று படுகின்றது. வடநாட்டினின்றும், வெளி நாடுகளினின்றும் தமிழ் இனம் துரத்தியடிக்கப் படுகின்ற நிலையில், தமிழனின் இருக்கின்ற கையளவு புகலிடமும் பறிக்கப் பட்டு விடுமோ என்று அஞ்சவேண்டிஉள்ளது. இந்தியக் கூட்டாட்சியால் தமிழனுக்குக் கிடைக்கின்ற ஊதியத்தைவிட மிகுதியாக இழக்க வேண்டியுள்ளது.