பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

43

பிரிக்கின்றது. நாம் எல்லோரும் ஓரினந்தான். ஆனால் பல்வேறு பிரிவினர் இப்பிரிவு நிறத்தினடிப் படையிலோ 'சாதி’யின் அடிப்படையிலோ அமைந்த தன்று; நிலத்தின் அடிப்படையில் அமைந்தாகும். மூலத்தோற்றத்தின் அடிப்படையில் அமைந்ததாகும்! அறிவியல் முன்னேற்றத்தின் எந்தப் புள்ளியிலும் ஓர் உருசியனும் ஒரு சப்பானியனும் ஒன்றாகி விடுவதென்பது தவறு. இந்நிலையை நாம் மிக நன்றாக மிகத் துல்லியமாகப் புரிந்து கொண்டால், வேறுபாட்டுணர்வுக்கே, பகையுணர்ச்சிக்கே இடமில்லாத வகையில் புரிந்து கொண்டால், ஓரினத்தைப் பிறிதோர் இனம் அடிமைப்படுத்தியோ, ஒன்றின் இயக்கத்துக்குள் பிறிது ஒன்றை அடக்கிக் கொண்டோ வாழ்வது என்பது குற்றமாகவும் கொடுமையாகவும் கருதப்படும்.

இங்கு ஒருண்மையை நாம் நன்றாக விளங்கிக் கொள்ளுதல் வேண்டும் நிலத் திணையியலில் எப்படிப் பூண்டினமும், புல்லினமும் தண்டினமும், மரவினமும் பகுக்கப் பெறுகின்றனவோ, விலங்கியலில் எப்படிக் குதிரையினமும், நாயினமும், யானையினமும், பகுக்கப் பெறுகின்றனவோ அப்படியப்படி மாறுபாடுற்று விளங்குகின்றனவேயன்றி ஒரேயினத்துள் வேறுபாடுகள் கொண்டு இவை விளங்கவில்லை. குதிரை யொன்றையும் அதன் இனத்தினதான கழுதை ஒன்றையும் இணைத்து எவ்வாறு கோவேறு கழுதையை நாம் படைத்துக்கொள்ள முடியுமோ, அப்படியே இந்தியனையும் சீனனையும் இணைத்து இந்தோசீனனையும், இந்தியனையும் ஐரோப்பியனையும் இணைத்து இந்தோ ஐரோப்பியனையும் நாம் உருவாக்கிக் கொள்ளலாம். அதனால் இந்தியனும் சீனனும் இந்தோசீனனும் இந்தோ ஐரோப்பியனும் ஓரினத்தவரல்லர். தனித்தனி இனத்தவரே. இப்படிப் பகுப்பதில் நமக்கு வேறுபாட்டுணர்வுதானே மிகும்; ஒற்றுமையுணர்விற்கு இடம் உண்டாவது எப்படி என்றால், இந்தியனும் சீனனும் வேறுவேறு என்று சொல்வோமே தவிர, இந்தியனைவிடச் சீனன் உயர்ந்தவன் என்றோ, தாழ்ந்தவன் என்றோ நாம் சொல்லுதல் கூடாது. உயர்வு தாழ்வு என்பது அறிவாலும், உழைப்பாலும் பண்பாட்டாலும், நாகரிகத்தாலும் கருதப்படுவது. ஆனால் அவ்வாறு கருதப்பெறும் உணர்வுகளிலும் கசப்புச்சுவை இருத்தல் கூடாது. இங்கு நாம் முகாமையாகக் கவனிக்க வேண்டியது, இக்கட்டுரையின் கருத்துப் பொருளாக நாம் மதிக்கவேண்டியது என்ன வென்றால் ஓரினத்தின் வாழ்வு இன்னோரினத்தின் கைகளில் ஒப்படைக்கப்படக் கூடாதென்பதுதான். இதையே சற்று அறிவியல் விளக்கமாகக் கூறினால் ஓரினத்தை, அல்லது பல இனங்களை ஆட்சி