பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

வேண்டும் விடுதலை

செய்யும் உரிமை, பிறிதோர் இனத்தில் அல்லது பிறிதோர் இனத்தின் நலத்தை மட்டுமே கருதக்கூடிய ஒருவரின் அல்லது ஓரினத்தின் கைகளில் ஒப்படைக்கப்படக் கூடாது என்பதே!

இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டுதான் விடுதலையுணர்ச்சியின் பரிமாணப் பொருள் எழுதப் பெறுதல் வேண்டும். உரிமையுணர்வின் அறிவியல் பொருள் கூறப்பெறுதல் வேண்டும். இதில் இன்னொரு கருத்தும் கவனிக்கப்படுதல் வேண்டும். உரிமை வேண்டும் இனம் என்னென்ன குறைகளைக்கூறி உரிமை கேட்கின்றது என்பதும் அதேபோல் உரிமை தரவேண்டிய இனம் என்னென்ன நிறைகளைக்கூறி உரிமைதர மறுக்கின்றது என்பதுமே அது. இப்பொழுது இதுவரை நாம் ஆராய்ந்த கருத்துகள் அனைத்தையும் வைத்து நாம் வெள்ளைக்காரனிடம் உரிமைகேட்ட வரலாற்றை நினைவு கூர்வோமானால் நமக்கு விடுதலையுணர்வின் அகரவரிசை தெரிந்துவிட்டது போன்ற ஓருணர்வு ஏற்படும். அதுதான் இது. அஃதாவது விடுதலை என்பது வயிற்றுப் பசியில்லாம லிருப்பதற்கோ, உழைக்காமல் உண்பதற்கோ கேட்கப்படுவதன்று அப்படியானால் நாம் விடுதலையே கேட்டிருக்க மாட்டோம். பின் விடுதலை என்பது எது? அது நம் மான உணர்வில் பழுத்த பயனுடைய கனி. அது நம் வயிற்றை நிரப்பாது; உணர்வின் நரம்புகளை நிரப்பும் உழைக்காமல் உண்ண வைக்காது; உழைப்பது மிகுந்து உண்பது குறைவாக இருந்தாலும் அது நம் நெஞ்சத் துடிப்புக்கு நிறைவளிப்பதாகும். எனவே வயிற்றை நிரப்பி வாழ்க்கையின் உள்ளுணர்வை நிரப்பாமல் இருப்பதே விடுதலை என்று ஆகாத பொழுது வயிற்றையும் நிரப்பாமல் வாழ்வின் உள்ளுணர்வுக்கும் பொருந்திவராத இன்றைய ஆட்சியை நாம் எப்படி விடுதலையாட்சி என்று கருதுவது? இதையும் சிலர் விடுதலைதான் உரிமையாட்சிதான் என்று கருதுகின்றார்களே என்றால், அவர்கள் ஒரு வேளை வயிறுமுட்ட உண்பதாலும் கள்ளக்காசு அடிக்க முடிவதாலும் ஏழையினத்தைச் சுரண்டிவாழ வழியிருப்பதாலும் தான் மட்டும் மேலானவன் என்ற பட்டயம் தீட்டிக்கொள்ள முடிவதாலுமே அவ்வாறு கருதலாம் நடக்கலாம். அவ்வாறு இல்லாத இருக்க முடியாத பிறர் எப்படி இந்த ஆட்சியை விடுதலை ஆட்சி தன்னுரிமை ஆட்சி என்று கருதிக்கொள்ள முடியும்?

எனவே நம்மைப் பொறுத்த வரை, தமிழர்களாகிய நம் இனம் நம்மினும் வேறுபட்ட முற்றிலும் மாறுபட்ட வடவாரிய இனங்களினால் ஆளப்படுவதும் அதன் பொருட்டு மாள விருப்பதும்