பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

45

விடுதலை பெறும் இன்றியமையாமையை வலியுறுத்துவதாகும். அரசியலில் பொருளியலில் குமுகாயவியலில், பண்பாட்டியலில் நமக்குப் பொருந்திவராத ஓர் ஆட்சி, குடியாட்சி என்று இயங்கினாலும் சரி முடியாட்சி என்று கூறப்பெற்றாலும் சரி, நம் உரிமைகளைப் பெறும் பொருட்டு நாம் பெற விரும்புவது, பெற வேண்டுவது விடுதலையே. இன்னும் விரிவாகவும் விளக்கமாகவும் சொன்னால் இந்தியக் குடியரசாட்சியினின்று நாம் - தமிழர்களாகிய நாம், நம் நாட்டை - நம் இனம் பரவிய இந்நிலத்தை- இந்நிலத்தில் உள்ள மக்களின் நலத்தை. இந்நலத்தின் அடியொட்டி விளையும் வாழ்க்கை வளத்தை உண்மையிலேயே நம்முடையனவாக்கிக் கொள்ள வேண்டுமென்பதுதான் நாம் கூறும் விடுதலைக்குப் பொருளாகும்.

நம் துயரங்கள் மலைபோல் வளர்ந்துவிட்டன; நம் தேவைகள் கடல் போல் பெருகிவிட்டன; நம் இழிவுகள் இன்று கூட்டித் தூய்மைச் செய்ய முடியாத அளவுக்கு மேலும் மேலும் மண்டிவிட்டன. பேச்சு உரிமையற்று விட்டோம்; எண்ண உரிமையற்று விட்டோம் நம்மைக் குமுகாயத்தின் அடித்தளத்தில் கொண்டுவந்து நிறுத்திவிட்டோம். நமக்குப் பசி பெரிதுதான்; ஆனால் பசி மட்டும் பெரிதில்லை; சோறு தேவைதான்; ஆனால் சோறு மட்டும் தேவையில்லை; நமக்கு வறுமையுண்டு; துயரம் உண்டு; போராட்டம் உண்டு; ஒற்றுமை எண்ணம் உண்டு. ஆனால் அவை போலவே நமக்கு மானமும் உண்டு, நம்மை நம் இனமல்லாத, நம் இனத்தின் நலம் பாராட்டாத எவனும் ஆளுதல் கூடாது. ஆம்! நாம் வடவனுக்கு - ஆரியனுக்கு என்றுமே அரசியலிலும் குமுகாய அமைப்பிலும் அடிமைகளல்லர்! உரிமைபெற வேண்டியவர்கள். விடுதலை வேண்டுபவர்கள். இதனை மறுக்கும் உரிமை எவருக்கும் இல்லை. அறிவின் பெயரால் அறிவியலின் பெயரால் இதனைப்பெற வழியில்லை என்றால், வலிவின் பெயரால் நாம் இதனைப்பெற்றே ஆகல் வேண்டும். என் உடன்பிறந்த தமிழனே! நீ என்ன சொல்கின்றாய்? விழி; எழு; நட!

-தென்மொழி, சுவடி :7, ஒலை 2, 1969