பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

வேண்டும் விடுதலை

காட்சியில் இறுமாந்து போகாதே! பேராயக் கட்சியும் தொலைந்துவிட்டது. காமராசும் பக்தவத்சல சுப்பிரமணியங்களும் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு கால்முறிந்து கிடக்கின்றனர் என்று பெருமைப்படாதே என்றைக்கும் உன்னால் வீழ்த்தப்படாத ஆரியம் உன் நடவடிக்கைகளில் எது சரியோ அதற்குப் புறத்தே பாராட்டும் அகத்தே குழிப்பறிப்பும். எது தவறோ அதற்குப் புறத்தே கண்டிப்பும், அகத்தே தூண்டுதலும் செய்து கொண்டுள்ளது. ஆகையால் மொழியறிவற்ற நீ, வரலாற்றறிவுகாணா நீ, ஆட்சித்தருக்குக் கொண்ட நீ உன் பாட்டன் பூட்டன்களாகிய பாண்டிய, சோழ, சேரர்களைவிடத் தோள்வலிவற்ற நீ, அவர்களாலேயே சாய்க்கவியலாத ஆரியத்தைச் சாய்த்து அதன் வாயைக் கிழித்து விடுவாய் என்று, நீ ஏதுமற்ற நீ, நினைப்பாயானால் அந்த அறியாமைக்குத் திருவள்ளுவரின் கல்லறை சிரிக்கும்; சிவஞான முனிவரின் கல்லறை நகைக்கும்; மனோன்மணியம் சுந்தரனாரின் கல்லறை எள்ளும், பா. வே. மாணிக்கனாரின் கல்லறை இரங்கும்; மறைமலையடிகளின் கல்லறை இகழும்; சோமசுந்தர பாரதியாரின் கல்லறை ஏசும்; பாவேந்தர் பாரதிதாசனின் கல்லறை ஏங்கும். ஆகவே உனக்குத் தேவையான உண்மையான விடுதலை கிடைப்பதற்குமுன் நீ உன் முயற்சிகளில் ஒருசிறிதும் பின்னடைய வேண்டா.

இந்தியாவில் இக்கால் ஏற்பட்டிருக்கும் அரசியல் வீழ்ச்சி, உன் விடுதலை - எழுச்சிக்கு வித்திட்டிருக்க வேண்டும். உன்நிலை முன்னையினும் இப்பொழுது மிகவும் இரக்கத்திற்குரியது. ஓய்விருந்தால் இந்திய வரலாற்றைச் சற்றே திருப்பிப் பார். அரசர்கள்மூ அதிகாரத்திலிருந்தவர்கள் தங்களுக்குள் அடிபிடிச் சண்டைகள் நடத்தியவற்றிற்கு யார் காரணர்களாக இருந்திருக்கின்றனர். என்றுபார். அங்கு நடந்துள்ள வீழ்ச்சிகளெல்லாம் எந்தெந்தச் சூழலில் நடந்தன என்பதை உன்னிப்பாகப் படித்தறி. எடுத்துக்காட்டிற்கு ஒரு நிகழ்ச்சியைத் தருகின்றேன். நாகப் பேரரசின் வரலாறு உனக்குத் தெரிந்திருக்கும். அதை நிறுவியவர்கள் ‘நந்தர்கள்’ என்றழைக்கப்படும் ஒன்பது நந்தர்கள். அவர்கள் எண்பத்துமூன்று ஆண்டுகளாக இந்தியாவில் ஆரிய இனத்தை அலற அடித்தவர்கள். அவர்களின் ‘புராண’, இதிகாசங்களைக் கொளுத்தியவர்கள்! அவர்களுள் கடைசி அரசனான் 'நந்தன்' என்பவன் ஆரியர்களை மிகவும் அடக்கி ஆண்டான் என்பதற்காக, விஷ்ணுகோபன் என்னும் ஓர் ஆரியப் பார்ப்பனன் அவர்களைச் சந்திரகுப்தன் என்னும் மெளரியனைக் கொண்டு வீழ்த்தினான் என்பது வரலாறு. நந்தன் ஆரிய எதிரி. சந்திரகுப்தன் ஆரிய அடிமை. நந்தன் ஆரிய இறைமறுப்புக்காரன்;