பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

59

மாற்றி யெழுதும்படி ஏன் இராசாசியிடம் போய்த் தலையைக் குனிந்து கொடுத்தார்? தூ..! இதுவும் ஓர் அரசியல் பிழைப்பா? இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற வீடணப் பிரகலாதன்களான பக்தவத்சல, சுப்பிரமணியன்களை ஏற்கனவே தலையாய 'சீடர்’ களாக ஏற்றுக் கொண்டிருக்கும் இராசாசியிடமே காமராசரும் மூன்றாந்தரச் சீடராகப் போய்ச் சேர்ந்ததைப்போல 'நல்லடிமைக் கதை' தமிழக வரலாற்றிலேயே இல்லை என்ற குறைபாட்டைக் காமராசர் நீக்க முற்பட்டு விட்டாரா? இத்துணை இழிவோடு அரசியல் நடத்தி எந்த மக்களை வாழ வைத்து விட உறுதி பூண்டுள்ளது இவ்வுருவம்? இந்த அரசியல் முல்லை (கற்பு) மாறித்தனங்களை யெல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு. இத்தகைய அரசியல் நாடகமாடிகள் இக்கால் தலையாய அரசியல் சிக்கலாக்கி வாழ்வு நடத்த முற்பட்டிருக்கும் பயிற்சி மொழித் திட்டத்தைப் பற்றி சிறிது பார்ப்போம்.

தமிழக அரசின் பயிற்சி மொழித் திட்டம், மிகத் தெளிவானதும் செப்பமானதுமாகும். இஃது ஏற்கனவே இருந்த பேராயக் கட்சியின் ஆட்சியிலேயே உறுதிப்படுத்தப் பெற்ற திட்டமேயாகும். இத் திட்டச் செயற்பாட்டில் எவ்வகைப் பதற்றமோ, உணர்ச்சி வயப்பட்ட நிலையோ இன்றுவரை ஏற்பட்டதே இல்லை. இதுபற்றிய இன்றைய அரசின் கொள்கை இது:

(1) தாய்மொழி (அஃதாவது தமிழ் நாட்டிற்கு) தமிழ், நாட்டு மொழி (அஃதாவது இந்தியாவில் மிகுதியான பெயர்களால் பேசப்படுவதாக நடுவணரசின் வெறியர்களால் விளம்பரப்படுத்தப் பெற்ற) இந்தி, உலக மொழியாகவும், அறிவியல் மொழியாகவும் உள்ள ஆங்கிலம் என்னும் மும்மொழித் திட்டம் தேவையற்றது. தமிழும் ஆங்கிலமுமே போதும் என்ற இரு மொழிக் கொள்கையே சரியான கொள்கை என ஏற்கப் பெற்றது. இக்கொள்கையையே மக்கள் ஏற்றுக்கொண்டனர். என்பதற்கு மும்மொழித் திட்டத்தை ஏற்றுக்கொண்ட பேராயக் கட்சியைத் தேர்தலில் தோல்வியுறச் செய்து மூலையில் அமர வைத்ததே சான்றாகும்.

(2) தாய்மொழியாகிய தமிழைப் பல வகையிலும் ஆங்கில மொழிக்கு ஈடான மொழியாக ஆக்குவதும், உலகத் தொடர்புக்குரிய ஆங்கிலத்தில் போதிய அளவு திறமையுள்ளவர்களாக எதிர்காலக் குடிமக்களாகிய மாணவர்களை ஆக்குவதும்.

(3) இதுவரை ஆங்கில மொழிவழியாகப் பயிற்றுவித்தமையைப்