பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

வேண்டும் விடுதலை

ஒரு வேண்டுகோள்: இந்த என் மனச் சான்றுக்கு வேறுபாடில்லாத கருத்தைத் தினமணி சிவராமன்களும், துக்ளக் இராமசாமிகளும், இன்னும் பேராயக் கட்சித் தேசி.....யங்களும் அப்படியே மொழி பெயர்க்காமல் இந்திரகாந்திக்கு அனுப்பி வைக்கப்பார்களாக)

அடுத்தப்படியாக இன்னொன்றையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். நான் அஃதாவது நானும் என்னை (அந்த ஒருவகையிலாகிலும்) பின்பற்ற விரும்புகிறவர்களும் (அப்படி யாராவது இருத்தால், அப்படி இல்லாத விடத்து ‘நான் ஒருவனே’ என்று பொருள் பண்ணிக் கொள்ளும்படி) எதிர்காலத்தில் என் மேல் வழக்குப் போட்டோ போடாமலோ மன்றில் கொண்டுப் போய் நிறுத்தி உசாவப் போகும் நடுவருக்குக் கூறிக் கொள்கின்றேன்) விரும்புவது தமிழக விடுதலையே. (இதில் யாரும் விருத்தியுரை விளக்கவுரை எதிர்பார்க்க வேண்டா) பச்சையான (காய்ந்து போன அன்று) தமிழகப் பிரிவினையே! அதற்குக் காரணங்கள் இவை:

முதலில், பிரிந்து போகும் உரிமை என்றன் பிறப்புரிமை. குடியரசு அமைப்பில் நானும் ஒரு குடி மகன். நானும் ஓர் ஆட்சியின் உறுப்பு. எனக்கு இந்த இந்திய நாட்டு ஆட்சியினின்று பிரிந்து போக வேண்டும் என்ற எண்ணம் வந்ததற்கே இந்த அரசு நான் குற்றவாளி. என்னைக் காட்டாயப்படுத்தி ஓர் ஆட்சியன் கீழ் (அது குடியரசாட்சியாக இருந்தாலும் சரி; வேறு எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி) என்னைக் குடிமகனாகச் செய்து கொள்ள, என்னைப் போல் உள்ள எவருக்கும் உரிமை இருக்கக்கூடாது.

இரண்டாவது, இவ்விந்திய ஆட்சி ஒரு சரியான குடியாட்சி அமைப்பில் அமைக்கப்பெற்ற ஆட்சியன்று. இங்குள்ள குடிமக்கள் எல்லாரும் வரலாற்று முறையாகவும் இன முறையாகவும் மொழி வழியாகவும், தாங்கள் அனைவரும் சமம் என்பதை ஒப்புக் கொள்ளவில்லை. ஒவ்வொருவரும் தங்களை வேறு வேறாகவே இன்னொருவருக்குத் தங்களை உயர்த்தியோ தாழ்த்தியோ, ஆண்டான் என்றோ அடிமை என்றோதான் இன்னும் கூறிக்கொள்கின்றனர். இவ்வாறு வரலாறு, இனம், சமயம், மொழி முதலியவற்றின் அடிப்படையாக உள்ள ஏற்றத்தாழ்வுகளை அறவே களைந்தெறியாமல், அரசியல் அமைப்பு ஒன்றினால் மட்டும் அனைவரும் சமம் என்பதும்; இது குடியரசு என்பதும், ஒரு பெரிய அரசியல் ஏமாற்று ஆகும். இதை என் மனச்சான்று சரியான ஆட்சியமைப்பாக ஒப்புக்கொள்ள மறுக்கின்றது.