பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

வேண்டும் விடுதலை

ஐந்தாவதாக, என் தாய்மொழியில் எவ்வளவோ சிறப்புகளிருந்தும், அஃது இந்நாட்டின் தேசிய மொழிகளுள் ஒன்று என்று ஏற்கப் பெற்றும் இம்மொழியில் கல்விகற்றவர்கள் இந்நாட்டில் எங்கும் சென்று அரசினர் பணி செய்ய வாய்ப்பில்லாமல் இருக்கின்றனர். இதைவிட இன்னும் அவலமான நிலை என்னவென்றால், இம்மொழியில் படித்தவர்கள் இப்பொழுது நான் வாழும் பகுதியும், என் தாய் மொழி வழங்கும் மாநிலமும் ஆகிய தமிழ்நாட்டில் கூட அரசினர் பணியேற்பதற்கான வாய்ப்புகள் இந்நாட்டு அரசியல் சட்ட அமைப்புகளால் உறுதிப் படுத்தப்பெறவில்லை. இதற்கு நேர்மாறாக இந்த நாட்டின் வடமாநில மொழியான இந்திக்கும் வேற்று இனமொழி படித்தவர்களுக்குமே அரசு அலுவலங்களிலும் பிற துறைகளிலும் வாய்ப்பு ஏற்பட்டு வருகின்றது. இதை என் போன்றவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. இவ்வகையில் மேலோங்கி நிற்கும் இந்தி வல்லாண்மையை 1937 இலிருந்து போராடியும் இன்னும் அகற்ற முடியவில்லை. இங்குள்ள சட்டமன்ற, பாரளுமன்ற உறுப்பினர்களும் இவ்வகையில் என்ன முயற்சி செய்தும் ஒரு முடிவை ஏற்படுத்த முடியவில்லை. என்நாடு அஃதாவது நான் வாழும் இத் தமிழ்நாடு, இவ்விந்திய நாட்டிலிருந்து முழு விடுதலை பெற்றாலொழிய இச்சிக்கலுக்கெல்லாம் வழி பிறக்காதாகையால், நான் தமிழகப் பிரிவினையை முழு மூச்சோடு வற்புறுத்துகின்றேன்.

ஆறாவதாக, இவ்விந்தியக் குடியரசாட்சி மத, இன வேறுபாடற்ற ஆட்சியாகும் என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. பெரிய ஆலைகள் திறக்கப்படும் பொழுதும், புதிய புதிய கப்பல்கள், வானூர்திகள், புகைவண்டிகள் முதலியன செயலாற்ற விடுவதற்கு முன்னும், அவற்றிற்கு அரசுச்சார்பில் பூசை வழிபாடுகள் முதலிய மூடத்தனமான செயல்களைக் கைக்கொள்ளுவதிலும், தேவையற்ற சாதி, சமய, புராண, இன ஆரவாரப் பண்டிகைகளைத் தேசியத் திருவிழாக்கள் என்றாக்கி அவற்றிற்கு விடுமுறைகள் விடுவதன் வழி ஏராளமான பொருட்செலவுகளையும், பொழுதுச் செலவுகளையும் வருவித்து, இந்நாட்டு மக்களை மேலும்மேலும் ஏழைகளாகவும் - அடிமைகளாகவும் மூடர்களாகவுமே வைத்திருக்க விரும்புகின்றஅல்லது வைத்திருப்பதைத் தவிர வேறு வகையற்ற ஆட்சியை எப்படி மதவேறுபாடற்ற குடியாட்சி என்று ஒப்புக்கொள்ள முடியும்”; எனவே இத்தகையப் பழைய அடிமைப் பழக்க