பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

வேண்டும் விடுதலை

வளித்த வேறொரு நாடு இருந்ததே இல்லை. அந்த நாடு தன்னொடு சேர்ந்திருப்பதால் தன் நாட்டுக்கு ஏதோ ஒரு வகையில் இழப்பு என்பதை உணர்ந்தாலன்றி, சேர்ந்துள்ள நாட்டின் நன்மைக்காக. தனிநிலைக் கோட்பாட்டின்படி உரிமைக்கு ஒப்பிய நாடோ, ஒரு தலைவனோ முன்னறிவோடு நடந்து கொண்டதாக இன்று வரை வரலாறு இல்லை. ஒவ்வொரு நிலையிலும் கண்ணீரும் குருதியும் சிந்தப் பெற்றுத்தான் ஒரு நாட்டின் வல்லதிகாரத்தினின்று அதன் பகுதி நாடுகள் விடுபாடு கொண்டிருக்கின்றன. இந்நிலைக்கு மாந்த முன்னறிவோடு ஒப்புதல் தரக்கூடிய பேரறிஞன் ஒரு நாட்டின் தலைவனாக இருந்ததில்லை, என்றும் அதனாலேயே ஒரு நிலத்தில் பல கொடிகள் அடுத்தடுத்துப் பறந்திருக்கின்றன; கிழித்தெறியப் பட்டிருக்கின்றன. இப்பொது மெய்ப்பாட்டியல்களின் அடிப்படையில் தான் தமிழகப் பிரிவினையை விளங்கிக் கொள்ளல் வேண்டுமேயன்றி, மனச்செருக்குடனோ அறிவுச்செருக்குடனோ ஆளுமை அதிகாரச் செருக்குடனோ இச் சிக்கலைத் தீர்க்க முனைவது யாகியாக்கானின் மூடத்தனத்தைப் போன்றது; அயூப்கானின் அகங்காரத்தைப் போன்றது; சார்மன்னனின் கொடுமையைப் போன்றது. அத்தகையோர்க்கு இத்தகு மெய்ப்பாட்டியல் (உண்மைக்கூறுபாடு) களால் விடை சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை; வேறு வகை மெய்ப் பாட்டு இயல் (உடல் முயற்சிக்கூறுபாடு)களாலேயே விடை சொல்லுதல் வேண்டும். உண்மையின் வலிவைப் புறக்கணிப்பவர்கள், உடல் வலிமையை என்றும் புறக்கணித்ததில்லை. வரலாறு முன்னோக்கித் தான் போகுமேயன்றி, பின்னோக்கிப் போனதில்லை. எனவே தான் தமிழகப் பிரிவினையை ஏதோ தீண்டத்தகாதவனின் கோரிக்கையைப் போல் கருதிக்கொண்டு குதிக்கும் இந்திரா அம்மையாருக்கும். அவரைப் போன்ற பிறர்க்கும் ஒன்று சொல்விக்கொள்ள விரும்புகின்றோம். தீண்டத்தகாதவனையும் தீண்டவேண்டும் என்று சட்டமியற்றும் காலம் இது. அதற்குத் தகுந்தவாறு மக்களின் இயற்கையான கூர்தலற மனவெழுச்சிகளை விளங்கிக்கொண்டு அவற்றிற்குச் செவிசாயுங்கள். இல்லையெனில் யாகியாக்கானைப் புறங்கண்ட உங்களை, அதே மெய்ப்பாட்டுக்காக நாங்கள் புறங் காண நேரும். எங்கள் இனத்திலும் உங்களிடம் வந்து பொறுக்கித் தின்ன நினைக்கும் ஓரிரண்டு சுப்பிரமணியன்களும், பக்தவத்சலங்களும், அண்டேக்களும் இருக்கலாம். தமிழ் மக்களின் குடுமி வடவனின் கைகளில் சிக்கியிருப்பதால் அத்தகையோர்க்கு