பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

வேண்டும் விடுதலை

அவர்களின் மொழி, இன, பண்பாடுகள் விரிவு படுத்தப்பெறுகின்றன. அறிவும் அக நோக்கும் அற்ற அவர்களைச் சேர்ந்த புல்லியர்களெல்லாரும் நாம் வணங்கத் தகுந்த தலைவர்களாக, வழிகாட்டிகளாக வந்து அமர்ந்து கொள்கின்றனர். நம் இன வழிகாட்டிகளும், நம்மின் பழம்பெரும் அறிஞர்களும் அவர்களுக்குக் கோமாளிகளாகவும் வாயில் காப்போர்களாகவுமே பயன்படுத்தப் பெறுகின்றனர். இந்நிலைகளை நன்கு உணராத அறிவு முண்டங்களாகிய பக்தவத்சல சுப்பிரமணியன்கள் தம் மண்டைப் புழுக்குடைச்சலினால் ஏற்படும் உளறல்களை யெல்லாம் நாம் அறிவுரை என்று ஏற்கத் தேவையில்லை. காமராசர் போலும் ஓரிரு பேராயக் கட்சித் தலைவர்கள் உண்மையிலேயே மக்கள் நலம் விரும்பிகள் என்றால், தாங்கள் தமிழகப் பிரிவினையை வலியுறுத்துவதைத் தவிர வேறு முயற்சிகளில் தங்களைக் கொண்டு செலுத்த வேண்டா என்று எச்சரிக்கின்றோம். ஒரு பெரும் அரசியல் மறுமலர்ச்சி வரலாறு உருவாவதை எந்தத் தலைவனோ தொண்டனோ தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை மட்டும் உறுதியாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றோம். காலத்தின் விளைவு இது என்று ஏற்றுக்கொள்ள வேண்டுமேயல்லாமல் எந்த எதிர்விளைவுக்கும் முயற்சி செய்து வரலாற்று வெள்ளத்தில் மூழ்கிப் போக வேண்டா என்று எதிரது உணரும் ஆற்றல் உள்ளவர்களையும் வேண்டிக்கொள்கின்றோம்.

- தென்மொழி, சுவடி :9, ஓலை 11, 1972