பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

வேண்டும் விடுதலை

நிலத்தாலும் தமிழன். இப்படிப்பட்ட உரிமைகளை எண்ணிப் பார்ப்பதிலும், அவற்றைத் தேடிப் பெறுவதிலும் அவை கிடைக்காமற் போகுமிடத்து அவற்றிற்காகப் போராடுவதிலும் என்னைப் பிழையென்று சொல்ல எவருக்கும் உரிமையில்லை. மாந்தன் வகுத்துக் கொண்ட உலகியல் சட்டங்கள் எல்லாமே ஓரினத்துக்காக ஓரினத்தாரே வகுத்துக் கொண்டதில்லை. ஓரினத்தை அடிப்படுத்தி ஆள முயன்ற பிறிதோர் இனம் அமைத்துக் கொடுத்தவையாகத் தான் பெரும்பாலும் காணப் பெறுகின்றன. மாந்தர் யாவரும் ஒரே இனத்தவரே என்பதினும் ஒரே உலகத்தவர் என்பதில் தான் பசையிருக்கின்றது. அவ்வாறு தருக்கத்திற்காக வேனும் உலக மக்கள் யாவரும் ஒன்றென்று கருதிக் கொள்ள வேண்டும் என்பதாகக் கூறப் பெறுமானால், அப்படிக் கூறுபவன் என் நம்பிக்கைக்கு முற்றும் உகந்தவனாக இருக்க வேண்டும் அப்படிப்பட்டவனுக்கு மொழி, இனம், நாடு என்பதாக ஒன்றுமே இருக்கக்கூடாது. அவன் கால் நடையை எந்த எல்லைச் சுவரும் தடுத்து நிறுத்திவிடக் கூடாது. அவன் பேசுகின்ற மொழி நான் பேசுகின்ற மொழியாக இருக்க வேண்டும். அவன் என்போல் உண்ண வேண்டும். என்போல் உடுக்க வேண்டும். என்போல் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். என்னைக் கீழாக வைத்துத் தன்னை மேலாக வைத்துக் கொண்டிருப்பவனின் அறிவுரையை என்றும் நான் ஏற்றுக் கொள்ளுவதற்கில்லை. எனவே அப்படிப்பட்ட ஒருவன் இவ்வுலகத்தில் எந்த ஊழியிலும் வாழ்ந்து விடமுடியாது.

உலகம் முழுவதுமே வேற்றுமையில் ஒற்றுமை காண்பதாகத்தான் இயங்கிக் கொண்டிருக்ககின்றதே தவிர வேற்றுமையற்ற ஒற்றுமையுடன் திகழ்வதாக எவரும் கூறமுடியாது. ஆனால் என்மொழி, என் இனம், என்நாடு என்பதாகக் கூறப் பெறும் உள்ளுணர்வை எவரும் எளிதில் சுட்டுப் பொசுக்கிவிட முடியாது. வேண்டுமானால் ஒரு பொழுதில் தூங்கி ஒரு பொழுதில் விழித்துக் கொள்வதைப் போல் ஒரு கால கட்டத்தில், ஒரு நில எல்லைக்குள் அதைச் செயற்படுத்தி, அடுத்த கால வட்டத்தில், அடுத்த நில எல்லைக்குள் அதைத் தகர்த்துவிட வேண்டியதாக இருக்கும். இவ்வியற்கை அமைதிக்குள்தான் உயிரினத்தின் உரிமை உணர்வும் விடுதலை உணர்வும் அடக்கப் பெற்றுக் கிடக்கின்றன.

இவ்வடிப்படையிலேயே தென்மொழி தன் மொழி உரிமையையும் இன் உரிமையையும் கடந்த பதினான்கு ஆண்டுக் காலமாக முழக்கி வருகின்றது. இக் கடுமையான தொடர்ந்த முயற்சியால் விளைந்த