பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

வேண்டும் விடுதலை

ஆனால் எத்தனை நாட்களுத்தான் இப்படி எண்ணத்திலும் எழுத்திலும் உணர்ச்சிகளை ஓட விடுவது? எனவே இறுதியாக ஒரு முயற்சி.

வரும் சூன் மாதம் 10, 11ஆம் பக்கல்களில் திருச்சித் தேவர் மன்றத்தில் ஒரு மாநாடு நடைபெறும், என்னைப் போல், எண்ணங்கொண்ட அல்லது என் எண்ணத்தையே எளிது என்று கருதும் படியான ஓர் உள்ளம் அல்லது உள்ளங்கள் எத்தனையோ இருக்கலாம். அவற்றிற்குப் போதிய துணையில்லாமலும் இருக்கலாம். அவற்றை யெல்லாம் ஒன்று கூட்டி ஒரு முடிவு காண்பதில் பிழையென்ன என்று எண்ணிக் கூட்டப் பெறுவது இம் மாநாடு. முன்பொரு முறை இப்டியொரு சிறு முயற்சி நடந்தது. ஆனால் மறைமுகமாக- எவருக்கும் தெரியாத முறையில் நடந்து முடிந்த அம்முயற்சி அப்பொழுதைய நிலையில் ஒரு பட்டறிவை எனக்குத் தந்தது. அதன் அடிப்படையில் அம் முனைப்பை இவ்விடைக் காலமெல்லாம் ஆறப் போட்டேன். அதற்குள் என்னை எனக்கு நேரெதிராகக் கருதிக் கொண்டவர் சிலர் பயனற்றவன் என்று ஏகடியம் பேசியவர் சிலர்; வெறும் வாய்ச் சொல்லில் வீரன் என்று ஏளனம் செய்தவர் சிலர்; உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு மக்களை ஏமாற்றி வாழ்கின்றவன் என்று குற்றம் சாட்டியவர் சிலர்; பெருந்தன்மையான திருடன் 'தகவிலாதவன்' என்று ஏசி வக்கனைப் பேசியவர் சிலர். இருப்பினும் என் வேலை தொடர்ந்தது. என்னால் ஏதோ ஒன்று நடைபெற வேண்டும் என்று மட்டும் என் உள்ளுணர்வு அடிக்கடி கூறி வந்தது. அதைச் செயற்படுத்திப் பார்த்து விடத் துடித்தேன். ஆனால் என் மன உணர்வுக்குத் தகுந்த வகையில் நான் நெருங்குகின்ற சிக்கல்களைத் தீர்த்துக்கொடுக்க முன்வருவோர் எவரும் கண்களில் படவில்லை. தமிழகத்துத் தலைவர்களை யெல்லாம் தனித்தனியாக எண்ணிப் பார்த்தேன். வல்லடிமைப் பட்டுக் கிடக்கும் இத் தமிழகத்தை விடுவிக்கும் ஒருவர்க்கு என்னென்ன திறமை தகுதி இருக்க வேண்டும் என்று என் மன இலக்கணம் சொல்கின்றதோ அதற்குப் பொருத்தமான ஒருவரைத் தேடிப் பார்த்தேன். எல்லாரும் ஏதோ ஒருவகையில் மக்களையும் தங்களையும் ஒட்டு மொத்தமாக ஏமாற்றிக் கொண்டு செல்பவர்களாகவே எனக்குப் பட்டனர். மக்களை எண்ணுபவர் மொழியைப் பற்றிக் கவலையில்லாதவராக இருக்கின்றார். மொழியைப் பற்றி நினைப்பவர் மக்களைப் பற்றிக் கருத்தில்லாதவராக இருக்கின்றார். இரண்டைப் பற்றியும் இணைத்து நினைப்பவர் பதவிக்காகத் தன்னைக் காவுகொடுத்துக் கொள்பவராக இருக்கின்றார். மூன்றிலும் தன்னை நெறிப்படுத்தி கொண்டவர் செல்வ நாட்டம் உடையவராக மக்களை ஏமாற்றிப்