பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

வேண்டும் விடுதலை

இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காகத் தனிப்பட்ட முறையில் எவரும் அழைக்கப் பெறவில்லை. இஃது ஒவ்வொருவருக்கும் அழைப்பு விட்டுச் செய்யப் பெற வேண்டிய செயல் அன்று. தமிழ் மொழி, இன, நாட்டு நலன்களில் உண்மையாகவே அக்கரை? கொண்டிருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கும் கீழ்க்காணும் தலைவர்களும் எல்லாரைப் போலவே இதழ் வழியும் அறிக்கைவழியும் அழைக்கப் பெற்றுள்ளனர். அவர்கள் வருவார்களோ, வரமாட்டார்களோ நமக்குத் தெரியாது. மாநாட்டுத் தொடக்கத்தில் அங்கு வந்திருக்கும் நல்லுணர்வுள்ள அன்பர்களில் ஒருவர் (அவர் எத்தனைச் சிறிய அகவையினராக இருப்பினும்) தலைமை தாங்கி நடத்துவிக்கக் கேட்டுக் கொள்ளப் பெறுவார்.

எனவே அன்பர் மாநாட்டிற்கு எவரெவர் வருவர் எவரெவர் பேசுவர் என்றெல்லாம் ஆராய்ந்து பார்த்துக் கொண்டிராமல் தன்மானத் தமிழினத்தின் இவ்விறுதிப் போராட்டத்தில் ஒவ்வொருவரும் தவறாமல் போய் கலந்து கொள்ள வேண்டும்; கருத்தறிவிக்க வேண்டும். எதிர்காலத் தமிழினப் புத்துணர்வுக் குமுகாயம் அமைக்கின்ற பணியில் ஒவ்வொருவரும் பங்கு கொள்ள வேண்டும் - தன்னலம் மறந்த உயரிய நோக்குடன் திருச்சி மாநாட்டிற்கு வருதல் வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். இன்னும் அங்கு வரவிருக்கும் அன்பர்களில் திருமணமான அன்பர்களாயிருப்பின் கட்டாயம் தம் மனைவி மக்களுடனும் திருமணமாகாத அன்பர்களாயிருப்பின் தம் உடன்பிறப்புகளுடனும் நண்பர்களுடனும் வந்து கலந்து கொள்ளுதல் வேண்டும்.

மாநாட்டின் முதல் நாள் காலை 7 மணிக்கு மாநாட்டு அரங்கினின்று பெரிய ஊர்வலம் தொடங்கி நகரத்தின் முகாமையான தெருக்களில் வீர நடையிட்டு மீண்டும் மாநாட்டு அரங்கிற்கே மீளும்.

மாநாட்டில் தொண்டர்களாக உழைக்க விரும்பும் அன்பர்கள் முன்கூட்டியே தென்மொழிக்குத் தங்கள் விழைவை எழுதி ஒப்புதல் பெறவேண்டும்.

மாநாட்டில் கலந்து கொள்ள விருக்கும் தமிழ் வளர்ச்சி மன்றங்கள், கழகங்கள் முதலியவை தங்கள் தங்கள் பெயர் பொறித்த துணிப்படாங்களை ஏந்தி வரலாம். அத்துடன் தனித் தமிழ் மொழி முழக்கங்களையும் நாட்டு விடுதலைக் கருத்துகளையும் அட்டைகளில் எழுதிப் பிடித்துக் கொண்டு வரலாம். அத்தகைய மன்றங்கள் தங்கள் பெயர்களையும் தாம் ஊர்வலத்தில் கலந்து