பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

வேண்டும் விடுதலை

கொண்டும் நடந்து வந்தனர். உரத்த குரலுடைய மறவர்கள் சிலர் முன் முழக்கமிட, அவர்களைத் தொடர்ந்து அன்பர்கள் வீறுபட கொள்கைகளை முழங்கியது. தெருக்களில் போவார் வருவாரையும் சந்து பொந்துகளில் நின்றாரையும் கடை கண்ணிகளில் வாணிகம் செய்து கொண்டிருந்தாரையும் நிலைகுத்தி நிற்கச் செய்து வியப்புடனும், வேடிக்கையுடனும் ஊர்வலத்தைப் பார்க்கவும் முழக்கங்களைக் கேட்கவும் செய்தது. முழக்கமிட்டவர்களில் திரு. அரணமுறுவல் அவர்களின் குரலும் திரு. நெடுஞ்சேரலாதன் அவர்களின் குரலும் இன்னுங்கூட திருச்சியிலுள்ள பொதுமக்களின் காதுகளில் சிலையோடிக்கொண்டிருக்கும்.

தேவர் மன்றத்தில் இருந்துபுறப்பட்ட ஊர்வலம் மேலரண் சாலை வழியே வடக்கு நோக்கிச் சென்ற பின், பிசப்சாலைக்குத் திரும்பி உறையூர் சென்று புத்தூர்ச்சாலை, மருத்துவமனைச்சாலை வழியே படையிருப்புப் பகுதியை அடைந்தது, வெயில் கடுமையாகக் கொளுத்தியதாலும், ஏறத்தாழ இரண்டு மணிநேரம் உரத்த குரலில் தொடர்ந்து முழக்கங்களிட்டதாலும் அனைவரும் தண்ணீர் அருந்தினர். பின் உடனே தொடர்ந்து சென்ற ஊர்வலம் பேருந்து நிலையம் சென்று மதுரைச் சாலையில்க் கிழக்கு நோக்கித் திரும்பிப் போய்க் கொண்டிருந்தது. ஊர்வலத்தோடு ஏற்கெனவே வந்து கொண்டிருந்த காவலர் சிலருடன் புதிதாகச் சிலரும் வந்து சேர்ந்தனர். சற்றுத் தொலைவில் பின்னால் காவலர் வண்டி ஒன்று ஊர்வலத்தைத் தொடர்ந்து முதலில் வந்தது போல் வந்து கொண்டிருந்தது தீடீரென்று ஊர்வலம் இடும் முழக்கங்களைத் தலைமைக்காவலர் ஒருவர் விரைந்து விரைந்து எழுதிக் கொள்ள முயன்றார். அவரால் முடியவில்லை. அவருக்கு 25 முழக்கங்களும் அச்சிட்ட படி ஒன்று கொடுக்கப் பெற்றது. அப்போது காவல் துறைப் பொது இயங்கி(jeep) ஒன்று ஊர்வலத்தைத் தாண்டிச் சென்று பின் மதுரைச்சாலை வழியே பாலக்கரைக்கடைத் தெருவினுள் நுழையும் போது காவல் துறைத் தலைமை அதிகாரிகள் ஏறிய இன்னியங்கி ஒன்று ஊர்வலத்தை முந்திச் சென்றது. சற்று நேரங்கழித்து ஊர்வலம் காந்தி அங்காடியை அடைந்ததும், காவல்துறை அதிகாரிகள் ஊர்வலத்தை மறித்தனர். காவலர் பலர் ஊர்வலத்தைச் சுற்றி வளைத்துக்கொண்டனர். அப்போது ஊர்வலம் நின்ற போதிலும் விடுதலை முழக்கங்கள் முன்னிலும் பன்மடங்கு உரத்த குரலில் முழக்கப்பெற்றன. மக்கள் கூட்டங் கூட்டமாய் ஆங்காங்கு நின்று வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.