பக்கம்:வேமனர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



41. திறமையுறும் மாணவனுக் குயரறிவைப் புகட்டச்
செகத்தினிலெவ் வாசானும் பின்னடையான்; மிக்க
அறிவினர்க்கும் பேதையினத் திருத்திடவொண் ணாதே
யாவரே வளைநதியை நிமிர்த்திடவல் லவர்கள்?

42. சிற்றுணர்வோர் எப்பொழுதும் தற்பெருமை பேசித்
திரிந்திடுவர்; பேரறிஞர் அமைதியுடன் வாழ்வர்:
பெற்றியுடன் மென்மொழியைப் பகர்ந்திடுவர்; தங்கம்
பீடற்ற பித்தளைபோல் ஒசையளித்திடுமோ?

43. வற்றாத புனற்கங்கை அமைதியுடன் மெல்ல
மாண்போங்க நெளிந்தோடும் கார்காலத் துயிர்கொள்
சிற்றாறு கல்லென்று குதித்தோடும்; தாழ்ந்தோர்
திறஞ்சான்ற சான்றோர்போல் அடங்கிநடப் பாரோ?

44. பொய்மையினேன் நல்லோர்போல் மேன்மையடை வானே?
புகழ்அதிட்டம் அவன்முகத்தில் முறுவலலர்ந் திடுமோ!
ஒண்மையுடன் அவன்வீட்டிற் பெருமைநிறைந் திடுமோ?
ஒட்டையுறு குடந்தண்ணீர் சேந்தவுத விடுமோ?

சார்லஸ் ஃபிலிப் பிரெளன் மொழி பெயர்ப்பிலிருந்து
மனிதனும் இறைவனும்:
45. வண்ணமுறும் அண்டமாய் ஆனவனுந் தன்னுள்
மாசற்ற பெருஞ்சோதி யிருப்பதறிந் தவனும்,
உண்ணிறைந்த பரம்பொருளைப் புறப்பொருளோ டிணைக்க
உணர்ந்தவனும், புவியகத்து நிறைந்தவன யினனால்.

46. "மும்மூர்த்தி தமைநாணம் உறச்செய்த குற்றம்
முரணற்ற வேமன்னன் தலைசுமக்கும்"-என்று
செம்மையுடன் பகர்ந்திடுக; ஒரேகடவுள் மட்டும்
செகத்தினிலே முறையான பெருமையினைப் பெறுக.

         வேறு

47. உருகுந் தாயை அறிந்தவனே
ஒப்பில் இறையை உணர்ந்தவனாம்:
மருவும் மண்ணை அறிந்தவனே
மாண்பார் விண்ணை உணர்ந்தவனாம்;
பொருவில் மண்ணைத் தனிவிண்ணைப்
புந்தி ஐயம் எய்தாமல்
துருவித் துருவி அறிந்தவனே
தூய தன்னை உணர்ந்தவனாம்.

93

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/100&oldid=1256133" இலிருந்து மீள்விக்கப்பட்டது