பக்கம்:வேமனர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பின்னிணைப்பு-3

சொற்றோகுதியும் குறிப்புகளும்

அட்டங்கி : இப்பொழுது குண்டூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர். புரோலயாவேமா (14-ம் நூற்) என்ற ரெட்டி அரசர் காலத்தில் இவ்வூர் தலைநகராக இருந்தபொழுது பெரும் புகழுடன் திகழ்ந்தது.

அத்வைத வேதாந்தம்: கெளடபாதர் என்பவரால் முதன் முதலாக இந்தியாவில் ஒழுங்குபடுத்தியுரைக்கப்பெற்றது. இதற்குச் சிறந்த விளக்கம் நல்கியவர் சங்கரர்.

அபினவகுப்தர் : (ஏறக்குறைய கி.பி. 1000). இவர் தத்துவ அறிஞர்; அணியியல் வல்லுநர்.

அப்பகவி : காக்குநூரி அப்பகவி என்பவர் கி.பி. 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இலக்கண யாப்பு நூல்களின் ஆசிரியர். நன்னயரால் எழுதப் பெற்றதாகக் கருதப்பெறும் வடமொழி நூலாகிய ஆந்திர சப்த சிந்தாமணி என்ற நூலினை மொழி பெயர்த்து மேலும் பல புதிய பொருள்களைச் சேர்த்துள்ளார்.

அமரகோசம் : கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கும் எட்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், (வின்டர்னிட்ஸ் கருத்துப்படி) வாழ்ந்தவராகப் கருதப்பெறும் அமரசிம்மர் என்ற புத்த சமயத்தவரால் தொகுக்கப் பெற்ற மிகவும் புகழ் பெற்ற வடமொழிப் பேரகராதி. இது மூன்று பகுதிகளாகப் பிரிக்கப் பெற்ற ஒரு பொருள் பல சொற்களைக் கொண்ட அகராதியாகும். அமரகோசத்திற்குக் கிட்டத்தட்ட ஐம்பது உரைகள் உள்ளன.

அரம்பை : தேவர்களும் அரக்கர்களும் அமுதம் பெற வேண்டித் திருப்பாற்கடலைக் கடைந்தபோது அக்கடலினின்றும் எழுந்த உம்பர் உலக அழகி. தன்னைவிட முனிவர்கள் சிறந்த மதிப்பைப் பெற்றுத் தன்னை ஒதுக்கி விடுவர் எனக் கருதி அவர்களை வசியம் செய்து தவறாண நெறியில் செலுத்துவதற்கு இவள் அடிக்கடி இப்புவிக்கு இந்திரனால் அனுப்பப்பெறுபவள்.

99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/106&oldid=1256138" இலிருந்து மீள்விக்கப்பட்டது