பக்கம்:வேமனர்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாதவர். சாதிமுறை அமைப்பினை நிலைநிறுத்த முயல்வோர்களிடம் விடாது போரிடும் ஒரு சமூகக் கலகக்காரர். மனிதனை எதிர்த்து மனிதன் மேற்கொண்டு வரும் மிகக்கொடிய குற்றமாகிய தீண்டாமை என்ற வழக்கத்தை வல்லந்தமாகவும் எதிர்த்து நிற்பவர். இவற்றின் காரணமாக மரபுச்சட்டம் மீறாத வைதீகர்களின் கண்களில் அவர் பாசாண்டராகவே, அதாவது கடவுளின் இருப்பை மறுப்பவராகவும் நம்பாதவராகவும் காணப்பெற்றார், அவருடைய பெயரைக் கூறினாலும் அது பாவகரமாகக் கருதப்பெற்றது.

இரண்டாவதாக, வேமனர் ஒரு சிவனடியாராக இருந்த போதிலும், இலிங்கம் தரித்தல், பட்டினி கிடத்தல், இரவு முழுவதும் உறங்காது விழித்திருத்தல், தல யாத்திரையை மேற்கொள்ளல் போன்ற புறப்பகுதிகளாகிய சிவ வழிபாட்டு மரபுகளை ஏளனம் செய்கின்றார். எடுத்துக்காட்டாக, இலிங்கத்தைத் தரித்திருப்பவர்கள் வஞ்சகர்களிலேயே மிகக்கீழானவர்கள் என்று பெயரிட்டுக் கூறும் அளவுக்கு அவருடைய இத்தகைய நடைமுறைகளின் கண்டனம் அமைகின்றது. பழைய எழுத்தாளர்களுள் சைவர்களாக இருப்போர் இயல்பாகவே சினமூட்டப்பெற்று அவர்களும் அவருக்கு எதிராக எழுந்த மௌன சூழ்ச்சியில் சேர்ந்து கொண்டனர்.

மூன்றாவதாக, வேமனர் சூத்திரர். தெலுங்கு அணி இலக்கணத்திற்கு ஒரு நிபுணர் என்று கூறப்பெறும் அப்பகவி என்பார் சூத்திரக்கவியொருவரின் நூலைப் பரிசோதனையின்றியே தள்ளுபடி செய்யப்பெறுதல் வேண்டும் என்ற விதியையும் வகுத்திருந்தார். 1829-இல் சென்னை சிவில் சர்வீஸைச் சார்ந்த சார்லஸ் ஃபிலிப் பிரெளன் என்பவரால் கல்லூரிப் பாடக்குழுவிற்காக அச்சிடப் பெற்ற 'வேமனரின் பாடல்கள்: நீதி, சமய, அங்கதப்பகுதி' என்ற தொகுப்பு நூலின் முதல் பதிப்பின் 500 படிகளில் 450 படிகள் எவரும் அறியாமல் மறையும் அளவுக்குச் சூத்திரக் கவிஞர்களின் மீது உயர்வகுப்பினைச் சார்ந்த மக்கள் வெறுப்புக் கொண்டிருந்தனர். (எஞ்சிய ஐம்பது படிகள் பதிப்பாளர் படிகளென அவருக்கு இலவசமாக வழங்கப்பெற்றன. கல்லூரிப் பாடக்குழுவில் உயர் வகுப்பினைச் சார்ந்த சில பண்டிதர்களின் சுறுசுறுப்பான மறைமுக உடந்தையினால் மறைந்த படிகள் யாவும் பயன்படாத தாள்களாகச் சுருட்டப்பெற்றுக் கல்லூரி நூலகத்தின் வேண்டாத பொருள்கள் போடும் அறைக்குள் தள்ளப்பெற்றிருந்தன என்பதைக் கண்டறிவதற்குப் பிரெளனுக்குப் பத்தாண்டுகள் தேவைப்பட்டன. சென்னைப் பணியாளர்க் குழுவினைச்சார்ந்த மேஜர் ஆர். எம். மாக்னடால்டு என்பார் 1866-இல் 'சென்னை இலக்கிய அறிவியல் ஆய்வேட்டில்' எழுதுங்கால் இதைப்பற்றிச் சற்று விரிவாகவே விளக்கிச் சொல்லும் அளவிற்கு வேமனரைப் பற்றிய

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/15&oldid=1244239" இருந்து மீள்விக்கப்பட்டது