பக்கம்:வேமனர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திறன்கள் யாவும் கொண்டிருக்குமாறு செய்திருந்தார். அஃது ஒரு வெடிகுண்டுபோல் வெடித்துப் பழைய பல தவறாண எண்ணங்களையும் ஒருதலைச்சார்புடைய கருத்துக்களையும் ஊதி எறிந்தது; அது இன்னும் தெலுங்கு இலக்கியத் திறனாய்வில் தலைசிறந்த ஓர் உயர்தர இலக்கியமாகத் திகழ்கின்றது. ஒரு திருப்பு - கட்டத்தை உண்டாக்கும் அந்த நூலில் வேமனரை டாக்டர் ரெட்டி ஆந்திரம் அளித்த மிகச்சிறந்த முன்மாதிரியான கவிஞர்களுள் ஒருவர் என்பதாகப்போற்றியுள்ளார். உண்மையிலேயே படைப்புக் கற்பனையிலும், சொல்திறனிலும் நகைச்சுவையிலும், முன்மாதிரியிலும், துணிவாகக் கூறுவதிலும், மூடப்பழக்கங்களை அப்பட்டமாகத் திறந்துகாட்டும் திறனிலும் பாசாங்குகளை வெளிப்படுத்திக் காட்டுவதிலும் வேமனர் தெலுங்கு இலக்கியத்தில் தலைசிறந்தவராகத் திகழ்ந்தார்.

தங்ககளுடைய எதிர்த்தாக்குதல் சின்னபின்னமாக உடைபட்டதும் வேமனரின் குரல்கள் பேராற்றல் வாய்ந்தவை என்றும், அதன் எதிரொலிப்பினைத் திக்குமுக்காடச் செய்ய இயலாதென்றும், அவர் தரும் செய்தி உயிருள்ளதென்றும், அனைத்தையும் உட்படுத்தியுள்ள அதனை அடக்கி வைக்க முடியாதென்றும், அவருடைய ஆளுமை மிகத் துடிப்புடையதென்றும், அது சிதைக்க முடியாத அளவுக்கு மிக்க இயக்க ஆற்றலைக் கொண்டதென்றும், தெலுங்கு இலக்கியத் தலைவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. சமய வெறியாலும், சமூகச் செருக்கினலும், தவறாண இலக்கிய மதிப்பீடுகளினாலும் அவர்கள் அறிவுக்குருடாக்கப் பெறாதிருப்பின் வேமனர் என்றும் சாவாத் தன்மையுடையவர் என்பதை மிக முன்னதாகவே அறிந்திருப்பர். அவருடைய சொல்லாற்றலையும், அவருடைய ஆளுமையின் செல்வாக்கினையும் தவிர, அவருக்குச் சாவாத்தன்மையை நல்குவதற்குத்தொடக்கத்திலிருந்தே வேரொரு வலு மூலத்தையும் கொண்டிருந்தார். அவருடைய வாழ்நாட் காலத்திலேயே அவர் ஒரு கட்டுக்கதையாகிவிட்டார்.

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/23&oldid=1242419" இலிருந்து மீள்விக்கப்பட்டது