பக்கம்:வேமனர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நாம் நினைவிவிருத்துதல் வேண்டும்.

நினைப்பிற்கெட்டாத நெடுங்காலத்திற்கு முன்னர் ஒருவர் புண்ணியப் பயணத்தை மேற்கொண்டார். அவருடைய பெயர் வேமர் என்பது. அவர் ஒரு வைசியர், தெலுங்கில் அவரைக் "கோமட்டி" என்று வழங்குவர். அவர் நோக்கிச்சென்ற திருத்தலம் சீசைலமேயாகும். அத்தலம் கர்நூல் மாவட்டத்திலுள்ள ஒரு குன்று; அஃது இன்றும் ஒர் அடர்ந்த கானகமாகத் திகழ்கின்றது. அது கிருஷ்ணா நதியின் வளைந்து வளைந்து செல்லும் கரைகளை நோக்கிச் சரிவாக அமைந்துள்ளது. அதன் உச்சியில் ஒரு பழங்காலச் சிவன் கோயில் அமைந்துள்ளது. அத்திருக்கோயிலில் அருளுடைய மல்லிகார்ச்சுனர் வடிவில் அப்பெருமானக் காணலாம். சிவ வழிபாட்டிற்கென ஒதுக்கப்பெற்ற சிவராத்திரியன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சீசைலத்தில் கூடுகின்றனர். அவர்கள் பகல் முழுவதும் பட்டினி கிடந்து இரவு முழுதும் உறங்காது விழித்தவண்ணம் விரதத்தை மேற்கொள்ளுகின்றனர். அவர்கள் கிருஷ்ணாநதியின் நீலநிற நீரோட்டத்தில் தீர்த்தமாடி, தங்கள் நெற்றியிலும் புயங்களிலும் வெண்ணிறு பூசி, சங்குகளை ஊதியும் பேரிகைகளையும் கைத்தாளங்களையும் முழக்கியும், ஆடியும் பாடியும் தங்கள் வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். பதின்மூன்றாவது நூற்றாண்டின் இறுதியில் அவ்விதம் வழிபாடு நடத்திய திருத்தலப் பயணி கோமட்டி வேமர் என்பவராகும்.

சிவராத்திரியின் மறுநாள் கோமட்டி வேமரைத் தவிர எல்லாத் திருத்தலப் பயணிகளும் தம்வீடு திரும்பிவிட்டனர். திருக்கோயிலிலும் அதன் சுற்றுப்புற இடங்களிலும் அவர் கபடமாக அடிக்கடிச் சென்று வருதல் கோயில் அர்ச்சகர்களின்பால் ஐயத்தை எழுப்பியது. அவர்கள் அவரைக் கோயிலைவிட்டு வெளியேறும்படிக் கட்டளையிட்டனர். "அடியேனை ஏன் விரட்டுகின்றீர்கள்?" என்று கோமட்டி வேமர் அவர்களைக் கெஞ்சும்பாவனையில் வினவினர். "அடியேன் உண்மையான சிவபக்தன். இறைவனுடைய திருவருளைப்பெறும் வரையில் அடியேன் அவருக்கு வழிபாடு நடத்த விரும்புகின்றேன்" என்றார். அர்ச்சகர்களும் மனமிளகி அவர் தங்குவதற்கு இசைவு தந்தனர். ஆயினும் திருக்கோயிலின் வடபால் உள்ள அடர்ந்த காட்டினுள் துழைய வேண்டாமெனக் கட்டளையிட்டனர். "அங்குப்பாம்புகள் அதிகமாக உள்ள; கானகத்தினூடே பொல்லாத பிராணிகள் அலைந்து திரிகின்றன" என்று அவர்கள் அவரை எச்சரித்தனர். எச்சரிக்கையாக அமைந்த அவர்கள் கட்டளை கோமட்டி வேமருக்கு ஒரு சொற்குறிப்பாக அமைந்தது: அனுமதிக்கப்படாத அந்த நிலப் பகுதியில் நுழைவதற்கு முதல்

19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/26&oldid=1244243" இலிருந்து மீள்விக்கப்பட்டது