பக்கம்:வேமனர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிரமமான பணியாகும். சி. பி. பிரௌன் என்பவர் இந்த முயற்சியில் ஈடுபட்ட முதற் புலவராவார். மிகவும் அநுகூலமான சூழ்நிலைகளில் அவர் மிக அக்கறையுடன் முயற்சிகளை மேற்கொண்டபோதிலும்-நம்முடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து, ஒருவகையில் தன் ஆய்வுகளை மேற்கொண்ட காலத்தில் ஒன்றரை நூற்றாண்டுகள் வேமனருக்குப் பக்கமாக இருந்தார். அவரால் குறைவான அளவே பெற முடிந்தது. தான் தொகுத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் குறிப்புகளுடன் கி. பி. 1829-இல் முதன் முதலாக வெளியிட்ட "வேமனரின் நீதி, சமய அங்கதப் பாடல்கள்" என்ற தலைப்பினைக் கொண்ட நூலின் நூன்முகத்தில் பிரௌன் இவ்வாறு கூறுகின்றார்:

அவர் (வேமனர்) பிறப்பில் காப்பு அல்லது உழவர் பரம்பரையைச் சேர்ந்தவர். சிலர், சந்தனூல் (அல்லது கர்நூல்) நாட்டைச் சேர்ந்த அன வேம ரெட்டி என்ற தலைமை நிலையிலுள்ளவரின் குடும்பத்தைச் சார்ந்தவர் என்று உறுதியாகக் கூறுகின்றனர்; இந்தக் கவிஞரின் சகோதரர் கண்டிக்கோட்டை என்ற கோட்டையை ஆட்சி செய்தார் என்றும் அவர்கள் உரைக்கின்றனர். மற்றும் சிலர் சந்தநூலைச் சார்ந்த கிறிஷ்டிபாடு என்ற இடத்தைச் சார்ந்தவராக இருக்கலாம் என்றும் நம்புகின்றனர்; மேலும் சிலர் அவர் குண்டுரைச்சார்ந்த இன கொண்டாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்றும் உரைக்கின்றனர்; ஆனால் நான் மட்டிலும் கடப்பை மாவட்டத்திலுள்ள சிட்வெல் என்ற இடத்தில் பிறந்தவர் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். ஆயினும், இந்த இடங்களிலெல்லாம் அவரைப்பற்றி உசாவி அறிவதற்கு வாய்ப்புகள் கிடைத்தன என்றபோதிலும் நான் எத்தகைய செய்தியையும் அறியக்கூடவில்லை. எனினும், சில பாடற் பகுதிகளில் காணப் பெறும் வட்டார வழக்கு (dialect) இந்த நகரங்கள் யாவும் அமைந்திருக்கக்கூடிய தெலிங்கானாவின் தென்-மேற்குப் பகுதிகளைச் சார்ந்தவராக இருக்கலாமோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது. நம் வரலாற்றுக் காலத்தில் அவர் பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவராக இருக்கலாம். என நம்பப் பெறுகின்றது.

ஆனால் பிரௌன் தயாரித்து வெளியிடாத மொழிபெயர்ப்பு பாடல்களைக்கொண்ட பெரியதொகுதி ஒன்றில்[1], அவர் கருத்து


  1. இது 1967-இல் ஆந்திர மாநில சாகித்திய அகாடமயாரால் (ஐதராபாத்) வெளியிடப்பெற்றுள்ளது. இதில் 1215 பாடல்கள் அவற்றின் ஆங்கில மொழி பெயர்ப்புடன் காணப் பெறுகின்றன.

30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/37&oldid=1244247" இலிருந்து மீள்விக்கப்பட்டது