பக்கம்:வேமனர்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்பில் முனைப்பாகப் பயன்படுத்தப் பெற்றுள்ளது. ஆகவே, நாம் வேமனரைக் காப்பு என்றும் சொல்லலாம்; ரெட்டி என்றும் குறிப்பிடலாம். என்றபோதிலும், தெளிவாகவும் விவரமாகவும் உள்ள கூற்று வற்புறுத்தப்பெற்றால் அவரை ஒரு 'ரெட்டி-காப்பு’ என்று சொல்லி வைக்கலாம். அதாவது வாழ்க்கைத் தொழிலில் உழவராக உள்ள ரெட்டி என்பது இதன் பொருளாகும்.

மேலும், வங்கூரியாரும் இரால்லப்பள்ளியாரும் வேமனர் இறந்த இடத்தைக் குறித்து மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனர். வேமனர் தம்முடைய இறுதி நாட்களைக் காட்டாரப்பள்ளி என்ற இடத்தில் கழித்து அங்கேயே மரித்தார் என்று வங்கூரியார் கருதுகின்றார். இதனை அவர் மிகத் தெளிவாகவும் விவரமாகவும் கூறாவிடினும் காட்டாரப்பள்ளியிலுள்ள கல்லறை உண்மையிலேயே வேமனருடையது எனக் கருதுவதாகத் தெரிகின்றது. இந்தச் செய்தியைக் குறித்து இரால்லபள்ளியார் தீராத ஐயங்களைக் கொண்டுள்ளார். கேம்பெல்லைப் போலவே, இவரும் ஒருமுறை காட்டாரப்பள்ளிக்குச் சென்றிருந்தார். வேமனரைப் பற்றித் தம்முடைய ஆந்திரப் பல்கலைக்கழகச் சொற்பொழிவுகளுக்குப் பொருள் திரட்ட நேர்ந்தபொழுது நாற்பதாண்டுகட்கு முன்னர் இச்செயல் நிகழ்ந்தது. அப்பொழுது காட்டாரப்பள்ளியில் அர்ச்சகராக இருந்தவர் கோயிலும் கல்லறையும் வேமன கவியுடன் போலியான தொடர்பு கொண்டுள்ளதை ஒப்புக் கொண்டதாக இரால்லபள்ளியார் கூறுகின்றார். ஆகவே, வேமனர் காட்டாரப்பள்ளியில் இறக்கவில்லை என்றும் அவர் இராயர்சீமையில் பிறிதோர் இடத்தில் இறந்திருக்கவேண்டும் என்றும் இரால்ல பள்ளியார் தம் கொள்கையை நிலைநிறுத்துகின்றார். குறிப்பான ஒப்புதலுடன், வேமனர் ஆதிசங்கரரைப் போலவே ஒரு குகையினுள் புகுந்து தமது உலக வாழ்க்கையை முடித்துக்கொண்டார் என்று காலஞ்சென்ற வேடுரி பிரபாகர சாஸ்திரி தன்னிடம் கூறியதாகவுள்ள ஒரு மரபு வழக்கினைச் சுட்டுகின்றார் அவர். வேமனரின் சீடர்களுள் ஒரு பகுதியினர் இந்தக் குகை கடப்பை மாவட்டத்திலுள்ள பாமூர் என்ற சிற்றூரிலிருப்பதாகக் கூறுகின்றனர்.

இவையும் இவைபோன்ற பிற ஆய்படு பொருள்களும் இன்னும் தீவிரமாக வாதிடப் பெறுகின்றன. ஆராய்ச்சிப் புலவர்கள் சிறுசிறு குழுக்களாக இருந்து வாதிட்டுக் களைத்துப்போகும் வரையில் இந்த வாதத்திற்கு ஒருவித முடிவும் இருத்தல் முடியாது.

3

37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/44&oldid=1244251" இருந்து மீள்விக்கப்பட்டது