பக்கம்:வேமனர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரன்ன சிறுசிறு செய்திகள் பற்றியும் சான்றுகள் தெளிவாக உள்ளன: அவை ஏராளமாகவும் உள்ளன. அவர் இளமையாயிருக்கும்போதே அன்னை இறந்தமை, சிற்றன்னையால் அவர் அடைந்த கொடுமை, பரத்தையின்பால் அவர் அறிவு மயங்கிக் கிடந்தமை, மகிழ்ச்சியற்ற குடும்ப வாழ்க்கை, பணத்தட்டுப்பாட்டால் நேரிட்ட தொல்லைகள், இரசவாதத்தில் அவர் நாட்டம் கொண்டமை போன்ற சில பெரு நிகழ்ச்சிகள் மட்டிலும் காரணம் காட்டாது விடப்பெற்றுள்ளன. இனி ஒவ்வொன்றாக அவற்றை விளக்குவோம்.

வேமனரது கோட்பாட்டில் அன்னையின்பால் காட்டவேண்டிய அன்பும் உயர் மதிப்பும் முக்கியமான குறிப்பாகும். "அன்னையை நன்கு அறிபவர் இறைவனை அறிபவராவார்" என்கின்றார் அவர். சாதாரணமாக இது ஒரு பொதுவான வாசகமாகக் கொள்ளப் பெறலாம். ஆனால் ஒரு தெளிவான சுய அனுபவம் இவண் குறிப்பிடப்பெறும் பாடலொன்றில் அமைந்துள்ளது: "உங்கள் அன்னை உயிரோடிருக்கும்பொழுது நீங்கள் அன்புக்கு உரியவராக அதிகம் போற்றப்பெறுகின்றீர்கள்; அவர் மறைந்தபிறகு உங்களைப்பற்றி யாரும் கவலைகொள்வதில்லை; காலம் இணக்கமாக இருக்கும் பொழுது நீங்கள் நல்லனவற்றையெல்லாம் அடைதல்வேண்டும்" என்றவற்றில் இதனைக் காணலாம். அன்னையார் இறந்த பிறகு இங்கனம் வேமனர் கேவலமாகவும் கொடுமையாகவும் புறக்கணிக்கப் பெறாதிருப்பின் அவர் இத்தகைய பாடலொன்றை எழுதியிருந்திருப்பாரா? தன்னுடைய அன்னையார் உயிரோடிருக்குங்கால் தான் ஒரு சிறந்த தகுதியுள்ள மகன் என்பதை மெய்ப்பிக்கவில்லை என்பதற்கு அறிகுறியாக இதில் ஒரு பெருமூச்சு, துன்பம் மிகுந்த புலம்பல், நம் காதில் விழவில்லையா?

இதற்குச் சமமாகப் சிறப்புப்பொருள் தரும் மற்றொரு பாடலின் கருத்து இது: "என்றும் சிற்றன்னை உங்களிடம் ஒரு குறையையே காண்கின்றாள். உங்களுடைய அன்னை உங்கள்பால் காட்டும் பொறுமையை எப்பொழுதுமே அவள் காட்டாள். நுண் நோக்குகளை வளர்த்துக்கொள்ளவேண்டுமாயின் நீங்கள் மனித இயல்பினை ஆழ்ந்து காணல் வேண்டும்". தாயற்ற பிள்ளையாக இருந்து சிற்றன்னையின் கொடுமையை நீண்டகாலமாகப் பொறுக்க முடியாது அநுபவித்த ஒருவரைத் தவிர, பிறரால் இத்தகைய பாடல் எழுதியிருந்திருக்க முடியாது.

இனி, பரத்தையின் கிளைக்கதைபற்றிய குறிப்புகள் மிகவும் வெளிப்படையாகவும் நேர்முறையிலும் காணப்பெறுகின்றன. "ஒரு பரத்தை உங்களிடம் அன்பு காட்டலாம்; அவள் உங்களைப் பாராட்டவும் செய்யலாம்; ஆனால் அச்செயல் அவள் தன்னுடைய

44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/51&oldid=1244261" இலிருந்து மீள்விக்கப்பட்டது