பக்கம்:வேமனர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மணல்துகளுடனும், தசையில் ஏறியுள்ள முள்ளுடனும் ஒப்பிடுகின்றார்.

இனி வேமனரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தமைப்பில்[1] காரணம் காட்டி விளக்கவேண்டியது இரசவாதத்தில் அவருக்கிருந்த அக்கறையைப் பற்றியாகும். நூற்றுக்கணக்கான பாடல்கள் இந்த உண்மைக்குச் சான்று பகர்கின்றன. அவருடைய சீடர்களில் சிலர் இன்றும் இரசவாத வாய்பாடுகளைப் பொறுமையாகத் தேடியெடுப்பதில் முயன்று கொண்டுள்ளனர்; சில பாடல்களின் மறைபொருளான அடிகளில் அவை புதைந்து கிடப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.

வேமனருக்கு வாழ்க்கை மென்மையான வழியாக அமையவில்லை; அது பல்வேறு மேடுபள்ளங்களையும் அபாயகரமான முடக்குகளையும் கொண்ட கரடுமுரடான சாலையாகவே இருந்தது. மீண்டும் மீண்டும் அந்த வழியில் அடிவைத்து நடக்கவே செய்தார்; விழுந்தார். ஆனால் ஒவ்வொரு தடவையிலும் தாமாகவே எழுந்து தம் முன்னோக்கிய பாதையில் பயணத்தைத் தொடர்ந்தார். துன்பங்களிலும் கடுந்துயர்களிலும் கண்ணீர் சிந்துவதிலும் ஒவ்வொருவரும் பெறும் பங்கைவிட இவருக்கு அதிகமான பங்கு இருக்கவே செய்தது. அவையாவும் அவரைத் திண்மையுடையவராக்கி விரிந்த நோக்குடனும் பலர் புகழ்ந்து கூறும் கருத்துடனும் துணிவானதும் மரபொழுங்கிற்கு மீறிய தத்துவத்துடனும் கூடிய தனித் தன்மைவாய்ந்த மனிதராகப் பண்படுத்தின.

அவருடைய தத்துவத்தின் குவிமையம் மனிதனைப்பற்றியதாகவே இருந்தது. "இந்தியாவின் இதயம்” என்ற தனது சிறிய நூலில் டாக்டர் எல். டி. பார்னெட் சரியாகக் கூறியதுபோல் வேமனர் "மனிதனைப் பற்றியல்லாத பிறவற்றில் கருத்தில்லாதவராகவே காணப்பெறுகின்றார்". வேமனரைப்பற்றியும் அவரது மனிதப்பற்றுச் சிந்தனைபற்றியும் பார்னட்டின் பாராட்டு கீழ்க் கண்டவாறு கூறும் அளவுக்கு மனவெழுச்சியுடையதாக இருந்தது.

மனித இனத்தைப் பற்றிக்கூறும் ஆசிரியர்களும் ஒழுக்க உரையாற்றுவோர்களும் இதயங்களைச் சோதிப்போரால் (இறைவனால்) ஒரு தராசில் வைத்து எடை காணப்பெற்றால், தெலிங்கானாவைச் சேர்ந்த பணிவான இந்தச் சிறு வேளாளரைவிட மிகு புகழும் வீறும் உடைய ஆன்மாக்கள் யாவரும் குறைந்த மதிப்புடையவராகவே காணப்பெறுவர்.

  1. இந்தப் புத்தமைப்பின் ஒரு பகுதியை எழுதுவதற்கு திரு இரால்லபள்ளி அனந்த கிருட்டிண சர்மாவுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.

46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/53&oldid=1243399" இலிருந்து மீள்விக்கப்பட்டது