பக்கம்:வேமனர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெளிவான நல்ல நம்பகமான ஓவியம் ஒன்றினை அதிலிருந்து பெறலாம். அந்தக் காலம் சோர்வுற்ற, சிறுமைப்பட்ட, நாகரீகமற்ற, அருவருப்பான காலமாகும். உலகப்பொருள்களிலும் ஆன்ம உணர்விலும் ஏழ்மைப்பட்டதாகவும், சிந்தனையிலும் பேச்சிலும் நாகரிகமற்றும், ஒவ்வொரு கூறிலும் அருவருக்கத்தக்கதாகவும் இருந்த காலமாகும் அது. இந்தியாவின் ஏனைய பகுதிகளிலிருந்ததுபோல ஆந்திராவிலும் நிலவிய இடைக்காலத்தின் இறுதியானதும் மிகமிக மோசமானதுமான கட்டமாகும். உண்மையிலேயே அந்தக் காலம் "இருட்படலமும் ஒளிமூடாக்குகளும், கொண்ட ஓர் இரட்டை இரவாகும்."

வேமனரின் கவிதை மூலம் நாம் கணநேரத் தோற்றத்தில் காணும் அவர் காலத்திய சமயநிலையின் பரந்த காட்சி இதுவாகும்: பிறப்பிலேயே வேமனர் எதிர்ப்பார்வமுள்ள சீர்திருத்த நோக்குடைய சிவ வழிபாட்டு முறையான வீரசைவ சமயத்தைத் தழுவியவர்; ஆனால் அவர் காலத்தில் அந்த வழிபாட்டுமுறையில் எதிர்ப்பார்வமும் இல்லை; சீர்திருத்த நோக்கமும் இல்லை. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த பசவர் என்பவரால் நிறுவப்பெற்ற அந்த வழிபாட்டுமுறை பல-தெய்வ வணக்கத்தை ஏளனம் செய்கின்றது, வேதத்தில் நுவலப்பெறும் பலிகளை கண்டு வருந்துகின்றது, கள்ளக் குருக்களின் தந்திரத்தைப் பழித்துரைக்கின்றது. சாதி வேறுபாடுகளையும் ஆண் பெண்களிடையேயுள்ள சமமின்மைகளையும் புறக்கணிக்கின்றது, தீண்டாமையைக் கடிந்துரைக்கின்றது, கடுமையான எல்லாத் துறவு நிலைகளையும் எதிர்க்கின்றது. அதனுடைய கோட்பாடுகள் எல்லாம் எதிர்மறையானவை அல்ல; உடன்பாட்டுக்கூறுகளில், அது அனுபவத்தால் பெறும் அறிவினையும், அறிவின் அடிப்படையிலமைந்த திட நம்பிக்கையினையும், கலப்பு மணங்களால் பெறும் சமூக சமத்துவத்தையும், குடும்ப வாழ்க்கையின் திருநிலைத் துய்மையையும், உடலுழைப்பின் மதிப்பினையும், நன்னெறிசார்ந்த நற்குண வளர்ப்பினையும் ஆதரிக்கின்றது. அது மனிதப் பண்புணர்ச்சியில் தோய்ந்து எல்லாவற்றையும் உட்படுத்திய சகோதரத்துவத்திற்காகப் பாடுபடுகின்றது. பசவரின் வீரசைவ சமயம் முதன்முதலாகப் பண்டிதர் சீபதி, பண்டிதர் மல்லிகார்ச்சுனர், பலகுரிக்கி சோமநாதர் முதலியோர்களால் ஆந்திர மாநிலத்திற்குக் கொணரப்பெற்று வேகமாகப் பரவி வருகின்றது. சமூக ஏணியில் ஒரு பக்கத்திலுள்ள பிராமணர் முதல் மறுபக்கத்திலுள்ள தீண்டத்தகாதவர்கள் வரை எல்லோரும் அச்சமயத்தின்பால் ஈர்க்கப்பெறுகின்றனர். அது புதியதொரு புலர்விடியலை முன்னறிவிக்கின்றது; புதிய சிந்தனையின் குவிமையமாக அமைகின்றது; வல்லமை வாய்ந்த ஒரு சீர்திருத்த இயக்கத்தைத் தோற்றுவிக்கின்றது.

48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/55&oldid=1250766" இலிருந்து மீள்விக்கப்பட்டது