பக்கம்:வேமனர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாங்கச்செய்தல் அரிதாக இருப்பதுபோல், வேமனரின் எச்சரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்கொலி போலாகி இருக்கலாம்.பொதுவாகச் சட்டத்தை மீறி நடக்கும் நிலை தன்னுடன் அடிக்கடி நிகழும் வற்கடங்களும் கொள்ளை நோய்களும் உட்பட வழக்கமாக நிகழும் எல்லாவித ஆரிடர்களையும் விளைவிக்கின்றது. வாழ்க்கையிலும் ஊக்கம் குறைகின்றது. அங்கனமே கலைகளும் கைத்தொழில்களும் மறையத் தொடங்குகின்றன. கல்வியும் குறைகின்றது. "மக்கள் பசியால் வாடுகின்றபொழுது கலைகளும் கைத்தொழில்களும் எங்ஙனம் செழிக்க முடியும்? கல்வியில் வளர்ச்சி எங்ஙனம் காணமுடியும்? சுடப்பெறாத மட்சட்டியில் எங்ஙணம் நீர் தங்க முடியும்?" என்று வேமனர் கேட்கின்றார்.

இத்தகைய இருட்படலம் சூழ்ந்த நலிவுற்றகாலத்தில் தோன்றிய வேமனர் ஒற்றையாகவே எதிர்த்து நின்றதும் தெளிவான கடுஞ்சொற்களால் பலரறியப் பழித்துக்கூறியதும் அவர் செல்வாக்கிற்குப் பலவகையில் சேர்ந்துதவக் காண்கின்றோம். சிலசமயங்களில், அவர் தொனியில் மழுங்கலாகவும், சொற்களில் கடுமையாகவும், கருத்துரைப்பதில் கண்டிப்பாகவும் இருந்தாலும் இதனால் அவர் மழுங்கியும் கடுமையாகவும் கண்டிப்பாகவும் இருந்தார் என்பதாகாது; இயல்பாக அவர் குடிப்பண்புடையவராகவும் அன்புடையவராகவும் பொறுமையுடையவராகவும் இருந்தார்; உண்மையில் அவருடைய மென்மையான மேம்பட்ட உணர்ச்சியே, அவரை வாய்வீச்சுக்காரன் என்றும் பித்தேறிய கிறுக்கன் என்றும் அவர் மீது வீசப்பெற்ற பட்டப்பெயர்களையும் பொருட்படுத்தாது, தன் காலத்திய இழிநிலையை எதிர்த்து அவர் ஆன்மாவைக் கதறியழியச் செய்தது. அந்தப் பட்டப்பெயர்களேயே தன்னுடைய பட்டப் பெயர்களாக்கிக்கொண்டு தன்னுடைய அரிதான நீள்நோக்கிற்கேற்ப உண்மையாக வாழ்ந்தார். ஒருக்கால் இவர் இடைக்கால இந்தியாவின் தத்துவக் கவிஞர்களுள் இறுதியானவராக இருந்தாரோ என்று சொல்லலாம். நிச்சயமாக அவர்கள் மிகப்பெரியவர்களுள் ஒருவராகவே இருந்தார் என்பதற்கு ஐயம் இல்லை.

53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/60&oldid=1250779" இலிருந்து மீள்விக்கப்பட்டது