பக்கம்:வேமனர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேமனர் செல்வந்தர்களை நோக்கித் தமது செல்வத்தை வறியவரோடும் தேவையிலிருப்போரோடும் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகின்றார். இரந்து கேட்பது தன்னையே இழிவுபடுத்திக் கொள்வதாகும் என்பதை வேமனர் நன்கு உணர்ந்தவர். "இரப்போன் மனிதர்களில் மிகமிக இழிந்தவன்” என்கின்றார் அவர். ஆனால் இரந்து வேண்டுபவனுக்கு ஈகையை மறுப்பவர் இன்னும் அதிகமாக வெறுக்கத்தக்கவராகின்றார் என்று உடனே கூறுகின்றார். பழங்காலந்தொட்டு வரும் பண்பினை எதிரொலிக்கும் பாவனையில் அவர், "நீங்கள் இறக்கும்பொழுது உங்கள் செல்வத்தை உங்களுடன் கொண்டு போகப்போவதில்லை. பிறருடன் பகிர்ந்து கொள்ளும் செல்வமே உண்மையில் உங்களுடையதாகின்றது" என்று கூறுகின்றார்.

பசவரைப்போலவே, வேமனரும் உழைப்பின் மதிப்பில் நம்பிக்கையுடையவர். ஒவ்வொருவரையும் ஏதாவதொரு வாழ்க்கைத் தொழிலை மேற்கொள்ளுமாறு பணிக்கின்றார். ஆனால் புரோகிதத் தொழிலுக்கு அவர் நன்மதிப்பு தருவதில்லை. அங்ஙனமே வாணிகத்திற்கும் அவர் ஆதரவு காட்டுவதில்லை. தரகர் வாழ்க்கைத் தொழில் அல்லது சுரண்டல் தன்மையுள்ள தொழில் அவருக்கு வெறுப்புத் தருவதாகும். கிறித்தவ மொழியாகிய "முகத்தில் வழியும் வியர்வையின் மூலம் உங்கள் ரொட்டியை உண்ணவேண்டும்" என்பதில் தன் முழுநம்பிக்கையை வெளியிடுவதில் டால்ஸ்டாயுடனும் காந்தியடிகளுடனும் ஒன்றாக நிற்கின்றார். அதே விதி கிட்டத் தட்ட அதே சொற்களில் தன்னுடைய பாடல்களொன்றில் வேமனரால் வெளியிடப்பெற்றுள்ளது. அவருக்கு உழைப்பே வழிபாடாகும். அஃது உடலுழைப்பாக அமையுமானால் அஃது எல்லாவற்றிலும் சிறந்ததாகும். பிறர் ஆடை வெளுப்போனைத் தாழ்வானவனாகக் கருதலாம்; ஆனால் அவன்தான் சமூகத்திற்குப் பணியாற்றுவோர்களுள் மிகச் சிறந்தவனாகின்றான் என்பதை வேமனரின் மனம் எண்ணுகின்றது. அவர் முதல்நிலை உற்பத்தியாளர்களின் மீது, அதிகமாகக் குடியானவர்கள் மீது, மிகப்பற்றுடையவர். ஒருசமயம் அவர் தன்னைப் பெருமிதத்துடன் காப்பு என்று குறிப்பிடும்பொழுது வேமனரும் உண்மையிலேயே சாதிப்பெருமைக்கு அப்பாற்பட்டவரல்லர் என்று சிலர் விரைவாக முடிவுக்கு வருகின்றனர். வேமனரின் பெருமிதம் உண்மையில் அவருடைய சாதியைப் பற்றியதன்று; ஆனால் அது அவரது வாழ்க்கைத்தொழிலான பயிர்த்தொழில் பற்றியதாகும்; தான் நாடோடி ஆவதற்கு முன்னர் அவர் ஒரு காப்பு (குடியானவர்) ஆவார். ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் அவர் தான் பிறந்த ரெட்டி சாதி பற்றிக் குறிப்பிடுங்கால் மிகுபுகழ்ச்சியாக இருக்கவில்லை.

69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/76&oldid=1251641" இலிருந்து மீள்விக்கப்பட்டது