பக்கம்:வேமனர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெழுச்சிகளையும் ஒழித்து முற்றிலும் தன்னை அவனிடம் (இறைவனிடம்) இழக்கும்பொழுதுதான் இறைவனுடன் ஒன்றாகின்றான். இல்லை, அவன் இறைவனேயாகிவிடுகின்றான். இந்தக் கொள்கை நெறியைப் புரிந்துகொள்ளாத மக்கள் அவனை (இறைவன்) திருக்கோயில்களிலும் வேறு புனித திருத்தலங்களிலும் தேடுகின்றனர். . . . . சிலர் உலகத்தையே துறந்து, எதிர்காலத்தில் ஏதாவது ஒருசமயத்தில், ஏதாவது வேறு ஒர் உலகில் அவனைக் (இறைவன்) காணும் நம்பிக்கையுடன் தவம் புரிகின்றனர். இஃது ஒரு மாபெரும் பொய்த்தோற்றமாகும்; மீப்பெரிய பொய்யுமாகும். "இந்த உலகில் இப்பிறப்பில் பேரின்பம் கிடைக்காவிடில், அது மற்றோர் உலகில் எப்படிக் கிடைக்கும்? தொடக்கத்திலேயே இல்லாத உள்ளுறைத் தன்மை இறுதியில் எங்கனம் கிடைக்கப்போகின்றது? ஆகவே, மனிதன் மிகவும் அடைய முடியாதபடி, எட்டாப்பழமாக, வரம்பில்லாத ஒன்று (Absolute) தனிச் சிறப்புக்குரிய இந்த உலகத்திற்கு அப்பால் எங்கோ ஓரிடத்தில் இருக்கின்றது என்று கூறுவது தவறாகும். அஃது உண்மையாக இங்கேயே மனிதனிடத்திலும் அவனைச் சுற்றிலுமே உள்ளது; அதனை அவன் தன்னுள்ளேயே நாடி அநுபவத்தால் அறிய வேண்டும். இங்ங்னம் தேடிச் செல்வோன் தன்னுடைய ஊரைவிட்டு அகலவேண்டியது அவசியமுமில்லை. வழியில் காணப்படும் குள்ளநரிகளை எண்ணிக்கையிடும் விருப்பம் இருந்தாலன்றி, அவன் ஏன் வெளியே செல்லவேண்டும்?’’

வேமனர் மனிதனை எல்லாப் பொருள்கட்கும் மிக நடுவே வைத்தெண்ணுவதால், அவரது மெய்விளக்கம் அடிப்படையில் மனிதப்பற்றுக் கோட்பாடாகவே அமைகின்றது. டாக்டர் ஈஸ்வர டோபா என்பவர் ஞானி வேமனர்: அவருடைய "மெய் விளக்கம்" என்ற தன்னுடைய நூலில் நம்முடைய கூரிய கவனத்தை இந்த உண்மைக்குக் கொண்டு வருகின்றார். வேமனர் "ஆன்ம-பண்பாட்டுநிலை”யை ஆதரிப்பதாகக் கூறுகின்றார் அவர். "வேமனரின் பண்பாட்டுக் குறிக்கோள் மனிதனுக்கும் நெறிகளாகிய மாளிகையின்மீது கட்டப்பெற்றுள்ளது. மனித ஆளுமையை ஒரேயடியாக மடைமாற்றம் செய்வதில் மனிதனே தன்னுடைய வழியில் பாடுபட்டு உழைக்கவேண்டும். அவனுடைய உயிருள்ள ஆளுமையில் விழுமிய ஆற்றல்கள் மறைந்து கிடப்பதால் மனிதனல்லாத கூறுபாடுகள் அவனுடைய விடுதலைக்கு வாரா. வேண்டப்படுவதெலாம் மனிதனுடைய நல்வாழ்வுக்காக மனிதப் பண்புகளைப் பண்படையச்செய்யும் முக்கியத்துவத்தை அநுபவத்தால் அறியவேண்டியதாகும்.

76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/83&oldid=1252129" இலிருந்து மீள்விக்கப்பட்டது