பக்கம்:வேமனர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனிதனின் இயல்பூக்கங்களையும் மனவெழுச்சிகளையும் மடை மாற்றம் செய்ய வேண்டுமேயன்றி அவற்றை அடக்கலாகாது என்பது உண்மையிலேயே வேமனருடைய சிந்தனையின் அடிப்படையாக உள்ளது. பாலூக்கம் மனித இயல்பினை இயக்கி வைக்கும் உயிராற்றலின் தலைமை மூலங்களில் ஒன்று என்ற தெளிவான கருத்தினைத் தோற்றுவித்து உளவியலைக் கண்டறிந்தவராகிய பிராய்டை முன்னறிகின்றார், "நீ அழகிய வனிதையொருத்தியைக் காணுங்கால் உன்னிடம் கொழுந்துவிட்டெரியும் காம உணர்ச்சி ஆன்மீக-ஆர்வ உணர்ச்சியாக மாற்றப்பெறுதல் வேண்டும்" என்கின்றார். பரமான்மாவுடன் சமாதி நிலையில் கலக்கும் பேரின்பத்தை நங்கையுடன் புணர்ச்சியாலடையும் சிற்றின்பத்துடன் ஒப்பிடுகின்றார். ஒருவர் மனவெழுச்சி மிகுந்த விஷயகாமியாக இருந்தாலன்றி, அவர் மோட்ச-காமியாக ஆக முடியாது” என்று கூறுவதில் இதே கருத்தினை வேறொருவிதமாகத் தெரிவிக்கின்றார். இந்த முக்கிய செய்தியை மேலும் அரண் செய்யும்முறையில் "கணவன் கொழுந்து விட்டெரியும் மனவெழுச்சியுடன் மனைவியை அணுகுவதுபோல் யோகி இறைவனே அணுகவேண்டும்" என்று மேலும் வற்புறுத்தி உரைக்கின்றார்.

வேமனர் நாகார்ஜுனரைப்போலவோ சங்கரரைப்போலவோ அறிவாற்றலுள்ள சூரராக இல்லாததால் ஒரு பெரிய மெய்விளக்க அறிஞர் என்றோ அல்லது ஒழுங்கமைப்புடையவர் என்றோ சொல்லுவதற்கில்லை. எனினும், அவர் தனக்கேயுரிய மெய்விளக்கத்தைக் கொண்டவர்; அஃது ஒவ்வொருவரையும் மனித வாழ்க்கையில் ஒவ்வொரு கூறினையும் முற்றிலும் தழுவியதாக அமைந்து விடுகின்றது. மெய்விளக்க வல்லுநர்கள் வேமனருடைய மெய்விளக்கத்தின் ஆழமான ஆராய்ச்சியை மேற்கொண்டு அதனுடைய ஜனநாயக, சமத்துவமுறை சார்ந்த, மனிதப்பற்றுக் கோட்பாடு சார்ந்த சிக்கல்களைத் தெளிவாக்க வேண்டியது மிகவும் விரும்பத் தக்கதாகும்.

77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/84&oldid=1252130" இலிருந்து மீள்விக்கப்பட்டது