பக்கம்:வேமனர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

செலுத்துவார். உட்பிரிவுகட்கேற்றவாறு நீண்ட சட்டைகளை அணிந்து கொண்டு சமய ஆசாரியர்கள் என்று தம்மைக் கூறிக் கொண்டுத் திகழும் பல வஞ்சகர்கள் தம்மைச் சுற்றி எங்கும் நிலவி வருவதைக்கண்டு தம்முடைய வாழ்வின் இறுதி நிலைகளில் தம்முடைய ஆடைகளனைத்தையும் விலக்கிவிட்டதாகத் தெரிகின்றது. உண்மையிலேயே, நாம் இவ்வுலகிற்கு வரும்போதும் ஆடையின்றியே வந்தோம், இவ்வுலகை விட்டு நீங்கும்போதும் அங்கனமே ஆடையின்றித்தான் செல்லுகின்றோம். அப்படி இருக்க நம்முடைய வருகைக்கும் செல்லுகைக்கும் இடையில் நாம் ஆடைகளை உடுத்திக்கொள்ளுவதற்காக ஏன் தொந்தரை செய்துகொள்ளவேண்டும் என்று வினவுகின்றார் அவர். அவருடைய அரை கிறுக்குத் தன்மைக்கு இன்னோர் எடுத்துக்காட்டு அவர் பெண்களிடம் கொண்ட இருபுடை ஈர்ப்பாகும். வேமனரின் இத்தகைய குறைபாடுகளும் இறுக்கங்களும்-அவற்றிற்கு அப்பெயர் தரப்பெற்றல்-அவை அவருடைய ஆளுமைக்கு ஒரு பகட்டான தோற்றத்தையும் கவர்ச்சியாற்றலையும் விளக்கத் தெளிவையும் நல்குகின்றன.

தம்முடைய நாட்டிலுள்ள கவிஞர்களுள் தமிழ்நாட்டுத் திருவள்ளுவருடனும், இந்தி நிலப்பகுதியைச் சார்ந்த கபீருடனும், கர்நாடகத்தைச் சார்ந்த சர்வக்ஞருடனும் தம் சிந்தனையால் உறவுகொள்ளுகின்றார். டாக்டர் ஜி. யூ. போப், திருவள்ளுவரை ‘உலக மக்களின் கவிஞர்' என்று போற்றிப் புகழ்கின்றார். வேமனரும் அத்தகைய ஒரு கவிஞரே யாவர். கால எல்லைகளை வைத்துக் கருதினால் இவர்கள் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கும், அதற்கு மேலும் இடைப்பட்டவர்கள். வெவ்வேறு நிலப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள்: உண்மையில் பார்த்தால் அவர்கள் வெவ்வேறு சமயச் சார்புடையவர்கள்; வேறுபட்ட மொழிகளில் நூல் எழுதியவர்கள்; ஆனால் அவர்கள் கூறும் செய்தி ஒன்றேயாகும்; அதாவது மணிதர்கள் யாவரும் ஒரே குலத்தைச் சார்ந்தவர்கள் என்பது. 'பிறப்பில் மனிதர்கள் யாவரும் சமமே' என்கின்றார் திருவள்ளுவர். பின்னர் அவர்கள் தம்முள் மாறுபடுவராயின் அங்ஙனம் மாறுபடுவது அவர்களுடைய சமயத்தையோ சாதியையோ பற்றியதன்று; அவர்கள் 'தம் குணவியல்புகளில் மாறுபடுவதே இதற்குக் காரணமாகும். 'உயர் குலத்தில் பிறந்தவராயினும், உயர் பண்புகள் அற்றவராயின் அவர்கள் இழிவானவர்களே யாவர். தாழ்ந்த குலத்தில் பிறந்தவராயினும் உயர்ந்த குறிக்கோள் நெறியைப் பின்பற்றுபவராயின் அவர்கள் உயர்ந்தவர்களேயாவர்.' என்று அப்பெருமான் தொடர்ந்து கூறுவர். வேமனரும், நாம் ஏற்கெனவே குறிப்பிட்டவாறு, இத்தகைய உண்மைகளை இன்னும் வலியுறுத்திக் கூறுகின்றார். 'எல்லோரும் ஒர் குலம்’ என்ற

80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/87&oldid=1254669" இலிருந்து மீள்விக்கப்பட்டது