பக்கம்:வேலூர்ப்புரட்சி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

வேலூர்ப் புரட்சி


அழியாப் புகழ்பெற்று விளங்கும் தொண்டைநாட்டின் வரலாறு தொன்மைச் சிறப்பு மிக்கது. இற்றை நாளில் செங்கற்பட்டு, வட ஆர்க்காடு, சித்தார் எனப்படும் மாவட்டங்களையும் தென் ஆர்க்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியையும் தன்னகத்தே கொண்டு திகழ்ந்த புகழ் மலிந்த நாடே தொண்டைநாடு. அந்நாட்டில் நால்வகை நிலங்களின் ஐந்திணை வளங்களும் செறிந்து விளங்கும். இயற்கை அன்னையின் கருணை பாலாறாய்ப் பாய்ந்து மக்களே ஊட்டி வளர்க்கும். தொண்டைநாட்டின் மணி முடியாய்க் திகழும் வேங்கடமலையே தமிழ்நாட்டின் வடஎல்லை. கடவுள் அன்பில் தலைசிறந்து விளங்கி நாளாறில் கண் இடந்த அப்பவல்ல பண்பு படைத்த கண்ணப்பனைக் கண்ட காளத்திமலை விளங்குவதும் இத் தொண்டைநாட்டில்தான். அருணகிரியார் திருப்பாடல்களால் அழியாப் பெருமைபெற்று விளங்கும் திருத்தணிகைமலை விளங்குவதும் இம்மண்டலத்தில்தான். சுருங்கச் சொன்னால் மலைவளமும் காட்டுவளமும் நிறைந்து காட்சி அளிக்கும் தகைமை சான்றது. தொண்டைநன்னாடு.1 இத்தகைய இயற்கைப் பெருவளம்


1. ஆர்க்காடு என்ற பெயர் அமைவதற்கு இருவகைக் காரணங்கள் கூறுவர் ஆராய்ச்சியாளர் :

(i) ஆர் என்பது ஆத்தி மரத்தைக் குறிக்கும்...அந் நாளில் ஆத்திமரம் நிறைந்திருந்த நிலப்பகுதி ஆர்க்காடு என்று பெயர் பெற்றது. இக்காலத்தில் ஆர்க்காடு ஒரு நாட்டுக்கும் நகருக்கும் பெயராக வழங்குகின்றது’